நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷனில் பொங்கல் பரிசு! – AanthaiReporter.Com

நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷனில் பொங்கல் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப் படுகிறது.9ம் தேதி வரை வாங்காதவர்கள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்றும்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாட்களில் வழக்கமாக அந்தந்தந்த மாதங்களில் வழங்கும் ரேஷன் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது
jan 5 - JAYA_PONGAL GIFT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 31ம் தேதி அறிவித்தார்.

பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டால் வழக்கமாக ரேஷன் பொருளுடன், பொங்கல் பரிசு தொகுப்பும் எளிதாக வழங்க முடியும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து நாளை முதல் 9ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என்ற சுற்றறிக்கை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்றும முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சி, டி பிரிவு ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும். ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் வி.ஏ.ஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளதாக் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.