நடராஜனுக்கு சிறை தண்டனையிலிருந்து விலக்கு! – சுப்ரீம் கோர்ட் உத்தரவு! – AanthaiReporter.Com

நடராஜனுக்கு சிறை தண்டனையிலிருந்து விலக்கு! – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

உடல்நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, உடல்நிலைக் காரணமாக, நடராஜன் தற்காலிகமாக சிறைக்குச் செல்லத் தேவையில்லை என்றும், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மேலும், நடராஜனின் மனு பின்னர் விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக் சொகுசு சார் இறக்குமதி செய்ததில் மோசடி நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு கால சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் உறுதி செய்தது. இந்த நிலையில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்த நடராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரணடைய விலக்குக் கோரி சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் சரணடைய உயர் நீதிமன்றத்தில் அவகாசம் மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

அதாவது கடந்த 1994-ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் ரூ.1.6 கோடி வரிஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜாரிதா சுந்தரராஜன் உள்ளிட்ட 4 பேர் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், யோகேஷ் பாலகிருஷ்ணனுக்கு ரூ.40 ஆயிரமும், மற்று மூவருக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது உறுதியாகி உள்ளது என்று கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் மனு செய்து தண்டனையிலிருந்து மனுதாரர்கள் விதிவிலக்கு பெற்றனர்.