தமிழ் திரையுலம் நாளை மெளன உண்ணாவிரதம் – AanthaiReporter.Com

தமிழ் திரையுலம் நாளை மெளன உண்ணாவிரதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின்எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மெளன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
cine sep 29
இதுகுறித்து தமிழ் திரையுலகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் சார்பாக வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில் அறவழியில் ஒரு மாபெரும் மௌன உண்ணாவிரத போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் சென்னை சிட்டி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூடடமைப்பு, சினிமா பி.ஆர்.ஓ யூனியன் உட்பட தமிழ் திரையுலகை சார்ந்த அனைத்து பிரிவினரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இதையொட்டி நாளை சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும், படப்பிடிப்புகளும், சின்னத்திரை படப்பிடிப்புகளும் அனைத்துத் திரையரங்குகளில் காட்சிகளும் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த உண்ணா விரதப் போராட்டம் எங்கள் அன்பின் வெளிப்பாடு. நன்றி உணர்வின் வெளிப்பாடு. காலம் மாறும் தர்மம் வெல்லும்.”என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தீர்ப்பு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இவ்விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை கண்டித்து நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் 4 காட்சிகளை ரத்து செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனால் நாளை அனைத்து தியேட்டர்களிலும் சினிமா படங்கள் திரையிடப்படாது. அத்துடன், தியேட்டர் அதிபர்கள் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நாளை ஒருநாள் உண்ணாவிரதமும் இருக்கின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது