தமிழக அரசு சின்னத்தில் கோவில் கோபுரத்தை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி! – AanthaiReporter.Com

தமிழக அரசு சின்னத்தில் கோவில் கோபுரத்தை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி!

“தமிழக் அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் உள்ளதால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. தேசிய சின்னம் மற்றும் பெயர் (தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்) சட்டம் மற்றும் இந்திய தேசிய கொடி விதிகள் சட்டம் ஆகியவற்றை மீறவில்லை. இதில் தேசிய கொடி அவமதிக்கப்படவில்லை.”எனக் கூறி தமிழக அரசின் சின்னத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
sep 21 - tn logo
காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் ஆர்.கண்ணன் கோவிந்தராஜூலு. ஓய்வுப்பெறற ராணுவ வீரர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் “தமிழ்நாடு அரசின் சின்னத்தில் (லட்சினை) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மேலும், அரசு சின்னத்தில் இடம் பெற்றுள்ள தேசிய கொடியின் அளவு தவறாக உள்ளது.எனவே தமிழக அரசின் சின்னத்தில் உள்ள கோவில் கோபுரம் உருவத்தை அகற்றவேண்டும். தேசிய கொடியின் அளவை சரியாக அமைக்கவேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோவில் கோபுரத்தை அகற்றி, சரியான தேசிய கொடியின் அளவை அரசு சின்னத்தில் பொறிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.”இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில்”ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுவரை எழுந்தது இல்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடும் பண்டிகையின்போது, அரசியல் தலைவர்கள் அதில் பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வழக்கும் இன்றும் நடைமுறையில் உள்ளது.

எனவே அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் உள்ளதால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. தேசிய சின்னம் மற்றும் பெயர் (தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்) சட்டம் மற்றும் இந்திய தேசிய கொடி விதிகள் சட்டம் ஆகியவற்றை மீறவில்லை. இதில் தேசிய கொடி அவமதிக்கப்படவில்லை. எனவே இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறேன்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.