தன்னை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு பண உதவி: விஜய் நெகிழ்ச்சி! – AanthaiReporter.Com

தன்னை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு பண உதவி: விஜய் நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது தன்னை வைத்து தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் விஜய், ‘ஜில்லா’ பட இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் கலந்து கொண்டார். இவ்விழாவில் விஜய்யை வைத்து ‘வசந்த வாசல்’ என்ற படத்தை தயாரித்த எம்.ராஜராம், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை தயாரித்த எஸ்.சவுந்திரபாண்டியன், ‘மின்சார கண்ணா’ படத்தை தயாரித்த ஆர்.சாந்தா கே.ஆர்.ஜி., ‘ஒன்ஸ்மோர்’ படத்தை தயாரித்த சி.வி.ராஜேந்திரன், ‘விஷ்ணு’ படத்தை தயாரித்த எம்.பாஸ்கர் அவருடைய மகன் பாலாஜி பிரபுவுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கி கௌரவித்தார்.
cine vijay 20.j 1
விழாவில் விஜய் பேசும்போது,”பல பேர்களின் கூட்டு முயற்சியில் உருவாவதுதான் சினிமா. அதில், மற்ற எல்லோரும் உழைப்பை மட்டும்தான் தருகிறார்கள். தயாரிப்பாளர்கள் மட்டும்தான் உழைப்பையும், சம்பாதித்த பணத்தையும் போடுகிறார்கள். படம் பூஜை போடுவதில் ஆரம்பித்து, அந்த படம் ரிலீஸ் ஆகிற வரை 100 பேர்களுக்கு சம்பளம் கொடுத்து, சாப்பாடும் போட்டு ஒரு தாயைப்போல் கவனித்துக்கொள்கிறார்கள்.

அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் மனசு கஷ்டப்படுகிறது. என் ஆரம்ப கால தயாரிப்பாளர்கள் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு கை கொடுப்பது என் கடமை என்று தோன்றுகிறது. ஏன் இப்போது தோன்றுகிறது? என்று கேட்கலாம். நல்ல விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அதை உடனே செயல்படுத்திவிட வேண்டும்.

இதைப்பார்த்து இன்னும் சிலர் இதுபோன்ற உதவிகளை செய்தால், சந்தோஷப்படுவேன். வெற்றி, 2 மடங்கு நம்பிக்கையையும், தோல்வி 2 மடங்கு அனுபவத்தையும் கொடுக்கும். அந்த அனுபவங்களை கொண்டு தயாரிப்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.’’”என்று விஜய் பேசினார்.


இதே விழாவில், ‘ஜில்லா’ படத்தின் ஆடியோவும் வெளியிடப்பட்டது. ‘ஜில்லா’ படத்தின் ஆடியோ கேசட்டுகள் நேரடியாக கடைகளில் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உதவி வழங்கும் விழாவின் ஒரு நிகழ்வாக ‘ஜில்லா’ படத்தின் ஆடியோவையும் வெளியிட்டுள்ளனர்.