ஜெ . நினைவுதினம்: அதிமுகவினர் அஞ்சலி! – AanthaiReporter.Com

ஜெ . நினைவுதினம்: அதிமுகவினர் அஞ்சலி!

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பரில் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, அவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிமுகவினர்கருப்பு சட்டை அணிந்தபடி அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பழனிசாமி, பன்னீர்செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புச்சட்டை அணிந்து நடந்து சென்றனர். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றனர். பின்னர் கட்சியை காப்போம் என்று முதல்வர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சென்னை மாநகாராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

டிடிவி தினகரன் தலைமையில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி பிரம்மாண்டமாக இன்று பகல் 12.30 க்கு தொடங்கியது. பெரும் திரளான தொண்டர்களுடன் தினகரன் அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை சாலையில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..