ஜல்லிக் கட்டு-க்கு இன்னமும் தொடரும் முட்டுக் கட்டை – AanthaiReporter.Com

ஜல்லிக் கட்டு-க்கு இன்னமும் தொடரும் முட்டுக் கட்டை

ஜல்லிக்கட்டு… தமிழகத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வீர விளையாட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, கிராம கோயில் திருவிழா, சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆடுகளத்தில் சீறிப்பாயும் முரட்டு காளையை அடக்கும் வீரர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப்படும்.அடக்க முடியாவிட்டால், அஞ்சாத காளை என புகழ்ந்து அதற்கு பரிசளிக்கப்படும். தமிழர்களின் பாரம்பரியமான இந்த வீர விளையாட்டு கிராம கோயில் திருவிழா வழிபாட்டில் ஒன்றாக நம்பப்படுகிறது.
jalli kattu 23
தமிழகத்தில் 650க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகத்தையே கவர்ந்து இழுக்கும் சிறப்பு பெற்றது.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடக்க விடாமல் முடக்கி போடும் திட்டத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன் விலங்குகள் நல சங்கம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாகாந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அன்றைக்கு எழுந்த சோதனை இன்னும் முழுமையாக நீங்காமல் சோதனை மேல் சோதனையாக நீடிக்கிறது.

இதற்காக, முந்தைய ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுகளில் பலியானோர், காளைகள் சித்ரவதை காட்சி வீடியோ, கட்டுப்பாடு மீறல் குறித்து பட்டியல் தயாரித்துள்ளது. மேனகா காந்தியும், ஹேமமாலினியும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர் கள் அஞ்சுகிறார்கள். காளையை விலங்குகள் பட்டியலில் சேர்த்து தடை விதித்த மத்திய அமைச்சரின் உத்தரவும் ரத்து செய்யப்படாமல் 2 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை ஒரு ஆயுதமாக கையில் தூக்கிக் கொண்டு மிரட்டுவதாக அஞ்சப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன் கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ல் மதுரை அவனியாபுரம், 15ல் மதுரை பாலமேடு, 16ல் உலகபுகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டு விட்டது.ஜல்லிக்கட்டுக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முரட்டு காளைகள் தயாராகி வருகின்றன. சத்துள்ள தீவனம், நீச்சல் பயிற்சி, தோட்டங்களில் மணல் மேட்டில் முட்டி மோதுதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுன்றன.

இதே போல் காளையை அடக்க காளையர்களும் சிறப்பு பயிற்சி பெற்று ஜரூராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு 6 ஆண்டுகளாக ஏதாவது ஒரு சோதனை எழுந்து, தடங்கல் ஏற்படுவதும், கடைசி நேரத்தில் நீங்குவதுமான நிலையே நீடிக்கிறது. கடுமையான கட்டுப்பாடுகளால் 400க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு முற்றிலும் தடைபட்டு போனது. எனவே தற்போது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தடுத்து தடங்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.