ஏழரையை கிளப்பிய எட்டு வழிச் சாலை சர்ச்சை! – AanthaiReporter.Com

ஏழரையை கிளப்பிய எட்டு வழிச் சாலை சர்ச்சை!

ஜப்பானியர்கள் மலைப்பகுதிகளை விரும்புவதையொட்டிய திட்டம் என்பதை நம்ப முகாந்திரங்கள் இருக்கின்றனவா?. சேலத்தைச் சார்ந்த ஒரு நண்பர் வேம்படிதளம் டூ சேலம் இடையே இருக்கும் ஒரு மலைப்பகுதியில் உள்ள தாதுப் பொருட்களை சென்னை துறைமுகத்திற்கு அள்ளிச் செல்வதற்கான திட்டம் என்கிறார். (ஏற்கனவே ஏற்காடு மலை கணிசமாக சிதைக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டது) உண்மையில் சாலையின் நோக்கம் சேலம் மட்டுமா அல்லது சேலத்தின் வழியே மேட்டூர் அங்கிருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு என ஏதேனும் திட்டம் இருக்குமா எனவும் யோசிக்க வைக்கிறது.

இந்த திட்டத்தில் 45% பழைய சாலைகள் விரிவாக்கம் என்றும் 55% முழுமையாக புது வழித்தடம் என்றும் ஒரு நண்பர் சொல்கிறார். ஏற்கனவே இருக்கும் சாலைகளை அகலப்படுத்துவதைவிட புதிதாக கோடு கிழித்து சாலைகள் போடுவது மிகப் பெரிய பாதகங்களை விளைவிக்கும். ஒருவரின் தேவைக்கு இன்னொருவரை தியாயம் செய் என மிரட்டுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியும்?. நிலத்தை எடுத்துக்கொண்டு வழங்கப்படும் தொகை ஒருபோதும் நியாயமான தொகையாக இருப்பதில்லை.

தம் நிலம் பறிபோகாது, ஆனால் தம் நிலத்தின் அருகில் நெடுஞ்சாலை வருவதால் நில மதிப்பு கூடும் என இந்தத் திட்டத்திற்கு காத்திருப்போர் அங்காங்கே இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி இருக்கலாம்.

காவல் துறையினரிடம் வாதம் செய்த, கைது செய்யப்பட்ட அந்த மூதாட்டியின் படங்கள் மனதை உலுக்கின்றன. எம் நிலத்திற்குள் யாரேனும் இப்படி அளந்து கல் நட்டால், அது என் பாட்டியின் குரலாய் இருக்குமென ஓங்கி அறைகிறது.

ஏற்கனவே சேலம் சென்னை இடையே இரண்டு வழிகளில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இரண்டு வழிகளில் ரயில் தடம் இருக்கின்றன. தமிழகத்தின் வேறு ஏதேனும் நகரம் இப்படி சென்னையோடு இணைக்கப்பட்டுள்ளதா? தொலைவைக் குறைக்கிறோம் என்கிற காரணத்திற்காக மூன்றாவதாய் ஒரு சாலை இவ்வளவு பெரிய அளவில் தேவைதானா?. சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதும், விமான சேவைகள் வழியே சென்னையோடு நெருங்கும் முகமாகவே இருக்கும்.

சேலம் வழியே மேற்கு மண்டலத்திற்குள் ஏன் இத்தனை நுழைவுகள். உண்மையான நோக்கம்தான் என்ன!?

credits:

P Kathir Velu