செயற்கை அரசியல்வாதி ரோபோ ;நியூ. தொழிலதிபர் தயாரிப்பு! – AanthaiReporter.Com

செயற்கை அரசியல்வாதி ரோபோ ;நியூ. தொழிலதிபர் தயாரிப்பு!

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் நிக் ஜெரிட்சன். 49 வயதான இவர் தொழில் முனைவோராக இருக்கிறார். பெரிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் அறிவுத் திறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை (ரோபோட் போல) உருவாக்க திட்டமிட்டார். இதற்காக விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மும்முரமாக ஈடுபட்டார். அதன் பலனாக அறிவுதிறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இதற்கு ‘சாம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த அரசியல்வாதி மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். கல்வி, குடியுரிமை, வீட்டுவசதி உட்பட துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆம்.. இந்த அரசியல்வாதி மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். கல்வி, குடியுரிமை, வீட்டுவசதி உட்பட துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி இருக்கிறார்கள். பேஸ்புக் மெசஞ்சர் மூலம் இந்த செயற்கை அரசியல்வாதியுடன் உரையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தொடர்ந்து பல விஷயங்களை செயற்கை அரசியல்வாதி கற்று வருகிறார் என்கின்றனர். உலக நாடுகளில் நடைமுறைகள் சரியில்லாத போது, இந்த ‘சாம்’ அதற்குத் தீர்வாக இருக்கும் என்று ஜெரிட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் வரும் 2020-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் ‘சாம்’ அரசியல்வாதி போட்டியிட தகுதியுள்ளவராக இருப்பார் என்று ஜெரிட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் சட்டரீதியாக அதற்கு வாய்ப்பில்லை.

இந்த முயற்சி வெற்றி பெற்று விட்டால், பாரபட்சம் இல்லாத ரோபோட் செயற்கை அரசியல்வாதிகள் தேர்தலில் களமிறங்கும் காலம் வரும் வாய்ப்பும் உள்ளதாக ஜெரிட்சன் கூறுகிறார். மேலும் இதுகுறித்து நிக் ஜெரிட்சன் கூறும்போது, ‘‘அரசியலில் தற்போது பாரபட்சமாக செயல்படும் நிலை உள்ளது. இது உலகம் முழுவதுமே உள்ளது. இதனால் பருவநிலை மாற்றம், சமத்துவம் போன்ற அடிப்படை மற்றும் பன்முக சிக்கல் நிறைந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை’’ என்றார்.