சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம். ஜோசப் பதவியேற்பு! – AanthaiReporter.Com

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம். ஜோசப் பதவியேற்பு!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம். ஜோசப் ஆகியோர் இன்று காலை 10:30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீத் சரண், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டதும், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதலில் இந்திரா பானர்ஜியும் அடுத்ததாக வினீத் சரணும் பதவியேற்றுக் கொண்டனர். 3-வதாக நீதிபதி கே.எம். ஜோசப் பதவியேற்கும் போது அவரது பணிமூப்பு கீழ்நிலை படுத்தப்பட்டதால், அவையில் அமளி, கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
நீதிபதிகள் எம்.பி. லோகூர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்கரி ஆகியோர் நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து, நீதிபதி கே.எம்.ஜோசப்பின் பணிமூப்பு பிரச்சினை குறித்த அவர்களது கருத்துகளை விளக்கினர்.

விடுப்பில் சென்றுள்ள நீதிபதி ரஞ்சன் கோகாய் தவிர, சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து நீதிபதிகளும் நீதிபதி கே.எம். ஜோசப்பின் பணிமூப்பை மத்திய அரசு கீழ்நிலை படுத்தியது குறித்து வருத்தம் தெரிவித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்திரா பானர்ஜி நியமனத்தால் சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை பானுமதி மற்றும் இந்து மல்கோத்ராவை சேர்த்து 3 ஆக அதிகரித்துள்ளது.