சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்றைய வாதம்! – AanthaiReporter.Com

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்றைய வாதம்!

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், பொது கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுக்க கூடாது எனவும் சூதிகளில் கூட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை, மதநம்பிக்கை அடிப்படையில் செய்யப்பட்டுவரும் இந்தப் பழக்கத்தை சோதித்துப் பார்ப்பதாகும் எனவும்   தேவசம் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. 4-வது நாளாக இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதங்களை முன்வைத்தார்.

அப்போது, பெண்களின் உடலியல் அமைப்பு காரணமாகவே அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும் நாட்டில் பலவித மதங்களுளும் பல வழிபாட்டு முறைகளும் இருக்கும் நிலையில், அனைத்தையும் அரசியல் சாசன அறநெறியின் கீழ் கொண்டுவர முடியாது என சிங்வி வாதாடினார். கடந்த 800 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நூற்றாண்டுகளாக நம்பிக்கையின் அடிப்படியில் பின்பற்றும் பழக்கத்தை நீதிமன்றம் சோதிக்க பார்க்கிறதா. மசூதிகளில் கூட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை, மதநம்பிக்கை அடிப்படையில் செய்யப்பட்டுவரும் இந்தப் பழக்கத்தை சோதித்துப் பார்ப்பதாகும் எனவும் தெரிவித்தார்.

அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறுகையில், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25,26ன்படி, எந்த மதத்தையும், மதப்பழக்கங்களையும் ஒருவர் சுதந்திரமாக பின்பற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதர் பொதுநலன், அரசு உத்தரவு, மற்றும் அறநெறி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தடுக்க முடியும். நம்மை பொருத்தவரை கடந்த 1950-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அனைத்தும் அதற்குள் அடங்கிவிட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுமுதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழையத் தடை செய்யும் மதச் சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்ட கொள்கைகளுக்கு ஒத்துப்போக வேண்டும். மதச்சடங்கில் ஒரு பகுதியாக இருக்கும் 10 வயதுமுதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழையவிடாமல் பார்த்துக்கொள்ளும் பழக்கத்தைத் தேவஸ்தானம்தான் கடைப்பிடித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தேவஸ்தானம் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கும், இப்போது நீங்கள் வாதிடுவதற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மாதத்தின் முதல் 5 நாட்கள் அனைத்து வயதுப் பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், கூட்டம் வரும் சபரிமலை சீஸன் நேரத்தில் மட்டுமே அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆனாலும் சில கோவில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவித்த சிங்வி, பொது கருத்துகளின் அடிப்படையில் இந்த வழக்கில் முடிவெடுக்க முடியாது என்றும், ஆழமான மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். அதன்பின் அபிஷேக் சிங்வியின் வாதம் நிறைவடைந்த நிலையில், விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.