சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பட டைட்டில் ‘பேட்ட’ – AanthaiReporter.Com

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பட டைட்டில் ‘பேட்ட’

இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில்ல் ரஜினி நடித்து வரும் புதிய படத்தின் பெயர் ‘பேட்ட’ என்று உரத்த குரலில் சொல்லியபடி Motion Poster வெளியாகி உள்ளது. இதையடுத்து பேட்ட படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் டரெண்டாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ஜிகிர்தண்டா திரைப்படம் சூப்பர் என்று பலராலும் பாராட்டப்பட்டது. அந்த ஜிகிர்தண்டா வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை நேரில் அழைத்து பாரட்டினார். அன்றே ரஜினிகாந்த் நான் சேது கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பினேன் என கார்த்திக் சுப்புராஜிடம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பாபி சிம்ஹாவின் நடிப்பைப் பார்த்தபோது தனக்கு ‘பரட்டை’ கதாபாத்திரம் ஞாபகம் வந்ததாக கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

இதையடுத்து தொடர் பேச்சுவார்த்தை முடிவில் காலா, 2.0 படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கமிட் ஆகி நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப் படாத இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து நவாஸு தீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, ராம்தாஸ், ராமச் சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி ஹாஸ்டல் வார்டனாக வும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்கள் என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் டேராடூனில் படப்பிடிப்பு தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பாவில் நடைபெற உள்ள நிலையில், அதற்காக ரஜினிகாந்த் அங்கு நேற்று புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 165-வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு ’பேட்ட’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதுதான் இப்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதன் பின்னர் பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நான் சின்ன வயதில் இருந்து ரஜினியின் விசிறி. அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் ரஜினிதான். அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது நிறைவேறி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய ஸ்டைலில் கலக்கி வருகிறார். பேட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் பார்க்கும் போது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். சீக்கிரமே படத்தை முடித்து, சீக்கிரமே தியேட்டருக்கு வருகிறோம். ரசிகர்கள் அனைவரும் ரஜினி படத்தை கொண்டாடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்..