சந்திரயான்-2 -நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது! – AanthaiReporter.Com

சந்திரயான்-2 -நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது!

ஜாம்வவான்கள் என்று தங்களை பீற்றிக் கொள்ளும் பல்வேறு நாடுகள்கூட இதுவரை ஆராய்ந்து அறிந்திராத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிய வேண்டும் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, ‘இஸ்ரோ’வின் கனவு. அந்த கனவை நனவாக்குவதற்காக உருவாக்கிய விண்கலமான சந்திரயான்-2.  விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது.

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. பின்னர் பூமியை சுற்றிவந்த சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.

நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான் 2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்று வட்டப் பாதையில் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதன்படி சந்திரயானின் திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் இயக்கப்பட்டது.

இதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான் 2, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான் 2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. நாளை இந்த விண்கலத்தின் பாதை மற்றொரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வரும் செப்டம்பர் 2ம் தேதி பிரியும்.

அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது 2 முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7ம் தேதி லேண்டர் நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விக்ரம் லேண்டர் தரை இறங்கிய சில மணி நேரத்தில், ரோவர் பிரக்யான் மெல்ல மெல்ல நிலவின் தென்துருவப்பகுதியில் தரை இறங்கும். ஆர்பிட்டர் ஓராண்டு காலம் ஆராய்ச்சிப்பணியில் ஈடுபடும். லேண்டர் விக்ரம், ரோவர் பிரக்யான் ஆகியவை 14 நாட்களுக்கும் ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில்,”சந்திரயான்2 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்ததற்கு இஸ்ரோவுக்கு என் வாழ்த்துக்கள். நிலவை நோக்கிய இந்த மைல் கல் பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு” என்று பதிவிட்டுள்ளார்.