கொரியா பிரதர்ஸ் ஆபீஸில் மறுபடியும் வடகொரியா ஊழியர்கள்! – AanthaiReporter.Com

கொரியா பிரதர்ஸ் ஆபீஸில் மறுபடியும் வடகொரியா ஊழியர்கள்!

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக,
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக,
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக; என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒன்றாக இருந்த வடகொரியா – தென்கொரியா சிலக் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இணைந்து உருவாக்கிய கூட்டு தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றிய தன் ஊழியர்களை வடகொரியா கடந்த வாரம் திரும்ப பெற்றது. இதனிடையே கொரியா கூட்டு தொடர்பு அலுவல கத்தில் திங்கள்கிழமை வடகொரியா ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

சில பல ஆண்டுகளாக சரவதேச அளவில் மிரட்சியை ஏற்படுத்தியபடி நிலவிய மோதலுக்கு பின் போவ வருஷம் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருநாடுகள் இடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்க இருநாட்டு அதிபர்களும் உடன்பாடு ஏற்படுத்தி கொண்டனர். அதன் ஒரு பகுதியாக வடகொரியாவின் கேசாங் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு கொரிய நாடுகளின் கூட்டு தொடர்பு அலுவலகம் திறக்கப்பட்டது.

அதே சமயம் வியட்நாமில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடைகளை அகற்ற அமெரிக்கா மறுத்து விட்டது. அதை தொடர்ந்து மார்ச் 22ம் தேதி கொரியா கூட்டு தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை திரும்ப பெறுவதாக வடகொரியா அறிவித்தது.

இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்த தென்கொரியா தங்கள் நாட்டு ஊழியர்கள் கூட்டு தொடர்பு அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என கூறியது. இந்த சூழ்நிலையில் வடகொரிய அரசால் திரும்ப பெறப்பட்ட கூட்டு தொடர்பு அலுவலக ஊழியர்கள் இன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இன்று காலை வடகொரியா மற்றும் தென்கொரியா அதிகாரிகள் இடையே கூட்டு தொடர்பு அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இனி இந்த அலுவலகம் வழக்கம் போல் செயல்படும் என்று தென்கொரியா ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகொரியா ஏன் முதலில் ஊழியர்கள் திரும்ப பெற்றது. மீண்டும் ஏன் ஊழியர்களை திருப்பி அனுப்பியது என்பது குறித்து வடகொரியா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கடந்த வாரம் வடகொரியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்ததால் வடகொரியா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.அ