கூட்டணி பற்றி பேசலாம் – வாருங்கள்! – விஜயகாந்த அறிவிப்பு! – AanthaiReporter.Com

கூட்டணி பற்றி பேசலாம் – வாருங்கள்! – விஜயகாந்த அறிவிப்பு!

“தேர்தல் சமயத்தில் பாலா கட்சிகள் நம்மை தேடி வருவார்கள். இம்முறை கூட்டணி வியூகம் எப்படி அமைக்கிறேன் என்று பாருங்கள். அதற்காக வேறு ‘ரூட்’ வைத்திருக்கிறேன்.இருந்தாலும் நமது கட்சியில் கூட்டணி குறித்து பேச அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி பேச வருபவர்கள் அவர்களிடம் பேசுங்கள். அதே சமயம் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா?, தனித்து போட்டியா? என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் முடிவு அறிவிக்கப்படும்” என்று தே மூ தி க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
jan 6 - vijaykanth. vijaykanth
சென்னையை அடுத்த பொன்னேரியில் நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசும்போது,”தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிவருகிறது. மக்களை ஏமாற்ற சதி வேலை செய்கிறது.என் மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன். என்றைக்கும் நான் அனாவசியமாக பேச மாட்டேன். எப்போதும் உண்மையைத்தான் பேசுவேன்.

மத்திய அரசோ, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. யாரோ ஒரு முதலாளி சம்பாதிக்க இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது. நாடு நல்லாயிருக்க வேண்டும், மக்களை தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். தேர்தல் சமயத்தில் நம்மை தேடி வருவார்கள். கூட்டணி வியூகம் எப்படி அமைக்கிறேன் என்று பாருங்கள். அதற்காக வேறு ‘ரூட்’ வைத்திருக்கிறேன்.

விஜயகாந்த் என்றாலே எப்போதும் கோபப்படுகிறான் என்கிறார்கள். கோபம் வருவது இயற்கைதான். அடிக்கிற கைதான் அணைக்கும் என்று கூறுகிறார்கள். 1991–ம் ஆண்டில் இருந்து 2008–ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் 2 கட்சிகளும்தான் மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. ஆனால், மின் உற்பத்திக்காக என்ன செய்தார்கள்.

நமது கட்சியில் கூட்டணி குறித்து பேச அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி பேச வருபவர்கள் அவர்களிடம் பேசுங்கள். உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மாநாட்டையும் நாம் சிறப்பாக நடத்த வேண்டும்.

இவ்வளவு கூட்டமா என்று எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில்தான் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் முடிவு குறித்து அறிவிப்பேன்.

சட்டசபையில் என்னை பேச விடுவதே இல்லை. இன்று அரசு காரை விட்டுவிட்டு என்னுடைய காரிலேயே அங்கு போய் வருகிறேன். என்னுடைய கட்சியை யாரும் தவறாக பேசவிடமாட்டேன். என்னுடைய கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் எங்கள் கட்சி கரைபோட்ட வேட்டியை கட்டி வருகிறார்கள். மற்ற கட்சியினர் எதிர்கட்சியாகும்போது கரை வேட்டியை வீட்டில் வைத்துவிடுவார்கள்.

நான் சமீபத்தில் என் மகன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்திற்கு பூஜை போட்டேன். ஆனால், அதுவரைக்கும் அது யாருக்காவது தெரியுமா?. அதேபோல், என் மனதில் ஒரு ரகசியம் உள்ளது. அதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. இன்றைக்கு ஊடகங்கள், தே.மு.தி.க. அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் கூட்டணி என்று கூறுகின்றன. நாங்கள் தனித்து நின்றால் என்ன செய்வீர்கள். அதனால், பொறுத்திருந்து பாருங்கள்.”என்று விஜயகாந்த் பேசினார்..