கூடங்குளம் : தீர்ப்பு குறித்த கமெண்ட்! – AanthaiReporter.Com

கூடங்குளம் : தீர்ப்பு குறித்த கமெண்ட்!

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது எந்தவிதமான அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ அளிக்கவில்லை. மக்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் மரியாதை கொடுக்கும் எந்த நாட்டிலும் கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற ஒரு திட்டத்தைக் கட்டியிருக்கவே மாட்டார்கள். தகுதியற்ற ஒரு ரஷ்ய நிறுவனத்திடமிருந்து, தரமற்ற உதிரிப்பாகங்களுடன் கூடிய ஆபத்தான உலைகளை வாங்கி தமிழ் மக்கள் தலைகளில் கட்டினார்கள் காங்கிரசார்.

இந்த உலைகளில் நடந்திருக்கும் ஊழல்களை, இடம்பெற்றிருக்கும் தொழிற்நுட்பக் குழப்பங்களை, அணுக்கழிவு மேலாண்மை தகிடுதத்தங்களை எல்லாம் பட்டியல் போட்டு, ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி வருகிறோம்.

ஆனால் மக்கள் விரோத அணுசக்தித் துறையும், அணுசக்தி மயக்கத்தில் கிடக்கும் மத்திய அரசும், அணுக்காமத்தில் உழலும் பா.ஜ.க.வும் எதையும் கண்டுகொள்வதாக இல்லை.

ஏழை இந்திய மக்களின் பணத்தை ரஷ்யா, அமெரிக்கா, ஃபிரான்சு, ஜப்பான் போன்ற அணுசக்தி நாடுகளுக்கு அள்ளிக்கொடுத்து, தமக்கானவற்றை எடுத்துக்கொண்டு, ‘வரும், ஆனால் வராது’ என்று மின்சாரப் படங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய கணக்கு மற்றும் தணிக்கைக் குழு கூடங்குளத்தில் நடந்த, நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்துகிறது. கடந்த வாரம் எரிபொருள் மாற்றும் நடவடிக்கையால் ரூ. 950 கோடி நாட்டுக்கு நட்டம் என்று ஓர் அறிக்கை வெளிவந்தது.

அணுசக்தித் துறை அமைச்சரான பிரதமர் வாய் திறந்து கருத்து சொல்ல மறுக்கிறார். மத்திய, மானில அரசுகள் போராடும் மக்களுக்கு “தூத்துக்குடி மருந்து” கொடுப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுகழிவுகளை சேகரித்து வைக்கும் அமைப்பை கட்டுவத்ற்கு 2018 வரை காலஅவகாசம் கேட்டார்கள். இப்போது அது முடிந்த நிலையில், எங்களிடம் அதற்கான தொழிற்நுட்பம் இல்லை, எனவே காலக்கெடுவை 2022 வரை நீட்டித்துத் தாருங்கள் என்று அணுசக்தித் துறை கேட்டது.

அறிவும், ஆற்றலும், மக்கள் மேல் கரிசனமும் உள்ள நீதிபதிகள், நீதிமன்றங்கள் தகுந்த கேள்விகள் கேட்பார்கள். அதற்கேற்ப முடிவுகள் எடுப்பார்கள், நீதி வழங்குவார்கள். ஆனால் நீதி-பாதி மீதி-பாதி என்றியங்கும் நமது நாட்டில் இது சாத்தியமா?

அறிவியல் படித்த வழக்கறிஞர்கள் நம் நாட்டில் எத்தனை பேர் உள்ளனர்? எத்தனை நீதிபதிகளால் அணுசக்தி பற்றி ஐந்து நிமிடம் பேச முடியும்? எந்த அடிப்படையில் இவர்கள் தீர்ப்பு வழங்குகிறார்கள்

இம்மாதிரி வழக்குகளில்?

அரசுக்கு கூஜா, அரசுத் தரப்புக்கு ஜால்ரா – இதுதான் இவர்களின் தொழில் தர்மம். எனவே இன்றைக்கு வந்திருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ அளிக்கவில்லை.

அமெரிக்கா, உக்ரெய்ன், ஜப்பான் எனும் அணுவிபத்தை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும் துர்பாக்கியம் நிகழ்ந்தால், மன்மோகனோ, மோடியோ, நீதிபதிகளோ வீதிக்கு வரமாட்டார்கள். நீங்களும், நாங்களும், நம் குடும்பத்தாரும் நடுத் தெருவில் நிற்போம்.

சுப. உதயகுமாரன்