குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க..! – முப்பெரும் விழாவில் கருணாநிதி! – AanthaiReporter.Com

குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க..! – முப்பெரும் விழாவில் கருணாநிதி!

“திராவிட இயக்கத்திற்கு தைரியம் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா ஆகியோர் ஆவார்கள். எந்த நன்றி உள்ள மனிதர்களும் அவர்களை மறக்க மாட்டார்கள். நான் தாக்கப்படும் நேரத்தில், என்னை தடவிக்கொடுத்து தாயாக இருந்த அந்த தலைவர்களை நான் எண்ணிப்பார்க்கிறேன். அந்த நன்றி கடனுக்கான விழா தான், இந்த முப்பெரும் விழா. ஒரு குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க.. நேற்று கூட அந்த அம்மையார், தி.மு.க. மண்மூடிப்போகும் என்று கூறி இருக்கிறார். உலகில் பிறந்த யாராக இருந்தாலும், மண்மூடித்தான் போவோம். அதில் யாரும் விதிவிலக்கு கிடையாது. ” என்று கருணாநிதி தெரிவித்தார்.
sep 10 = d m k
அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், தி.மு.க. தோன்றிய நாள் ஆகிய 3 விழாக்களையும் ஒன்றிணைத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி விருது மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், பெரியார் விருதை த.மு.ஆரியசங்காரனுக்கும், அண்ணா விருதை எல்.கணேசனுக்கும், பாவேந்தர் விருதை க.திருநாவுக்கரசுக்கும், கலைஞர் விருதை எஸ்.ஏ.எம்.உசேனுக்கும் கருணாநிதி வழங்கியபின்னர், முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது,”இன்றைக்கு நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, என்னுடைய நினைவு எல்லாம், என்னை தூக்கி வளர்த்த, பசியாற உணவு கொடுத்த, தாலாட்டு பாட்டுப்பாடி தூங்க வைத்த என்னுடைய சகோதரி படுத்த படுக்கையாக இருக்கும் சூழலை நான் கவலையோடு எண்ணிப்பார்க்கிறேன். அந்த கவலையிலும், உங்களை பார்த்து ஆறுதல் அடைகிறேன்.

உங்களுடைய மகிழ்ச்சியான முகம், ஆர்வம் தான் எனது கவலைக்கு மருந்தாகிறது. அந்த மருந்து இருக்கும் வரை எதுவும் தீண்டாது என்ற நம்பிக்கை உள்ளது. எந்த ஒரு மனித வாழ்க்கையும் மரணத்தோடுதான் முடியும். அந்த முடிவுக்கு பிறகும் வாழ்பவன் தான் மனிதன். அப்படி வாழ்பவர்கள் பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோர் ஆவார்கள். அவர்களுடைய புகழுக்கு என்றும் மரணம் இல்லை.

நாம் எப்போதும் விழமாட்டோம் என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது. திராவிட இயக்கத்திற்கு தைரியம் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா ஆகியோர் ஆவார்கள். எந்த நன்றி உள்ள மனிதர்களும் அவர்களை மறக்க மாட்டார்கள். நான் தாக்கப்படும் நேரத்தில், என்னை தடவிக்கொடுத்து தாயாக இருந்த அந்த தலைவர்களை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

அந்த நன்றி கடனுக்கான விழா தான், இந்த முப்பெரும் விழா. ஒரு குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க.. நேற்று கூட அந்த அம்மையார், தி.மு.க. மண்மூடிப்போகும் என்று கூறி இருக்கிறார். உலகில் பிறந்த யாராக இருந்தாலும், மண்மூடித்தான் போவோம். அதில் யாரும் விதிவிலக்கு கிடையாது. ஆனால் மண்மூடிப்போன பிறகு அதன் மீது எழுப்பப்படும் கல்லறையில் துரோகி என எழுதப்படுகிறதா? இயக்கத்திற்காக பாடுபட்டவர் என எழுதப்படுகிறதா? என்பது தான் முக்கியம்.

இந்த நேரத்திலே நான் எப்படி எழுத்தாளன் ஆனேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். 1945-ம் ஆண்டு புதுவை மாநிலத்தில், பாரதிதாசனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது எதிர்க்கட்சிக்காரர்கள் எங்களை குறி வைத்து தாக்கினார்கள். ஆனாலும், பாரதிதாசனுக்கு எந்த ஒரு அடியும் படாமல் காப்பாற்றி அனுப்பிவைத்தோம்.
sep 18 - d m k
ஆனாலும் அவர்களிடம் நான் சிக்கிக்கொண்டேன். அவர்கள் என்னை அடித்து நொறுக்கி, காயம் ஏற்படுத்தி போட்டுவிட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரியார் என்னை தூக்கி சீராட்டி, யார் பெற்ற பிள்ளையோ? எனக்காக அடிவாங்கி இருக்கிறது என்று அரவணைத்து அங்குள்ள குருகுலம் ஒன்றில் சேர்த்தார். அங்கு தங்கி இருந்தபோது தான், ஒரு நாள் இரவு புறநானூற்று கவிதைகளை எழுதினேன். அந்த புறநானூற்று கவிதையில் கூறப்பட்ட படி நமது பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதற்கான உறுதியை நாம் இன்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.