காவிரி பிரச்னை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு + மத்திய அரசு தனித் தனி மனுத் தாக்கல்! – AanthaiReporter.Com

காவிரி பிரச்னை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு + மத்திய அரசு தனித் தனி மனுத் தாக்கல்!

காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்’ என, பிப்., 16ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் இந்த விவகாரத்தில்  மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசும்  இந்த விஷயத்தில் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசும்  சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இது கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் அதனை குறைத்தது. அந்தத் தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவது, அதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லை. அதையடுத்து மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. காவிரி தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்துவிட்டதாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 49 பக்கங்களை கொண்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. மனுவில் நீர்வளத்துறை, மற்றும் அமைச்சரவை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காவிரி விவகாரத்தில் மேலும் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில் மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் அளித்ததை தவிர கூடுதல் கடமைகள் இருக்கலாமா.தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா என கேட்கப் பட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான 16.2.2018இல் இருந்து 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரியுள்ள மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன எனவும் அதில் கேட்டுள்ளது.