காவிரியில் இருந்து 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட ஆணையம் ஆர்டர்! – AanthaiReporter.Com

காவிரியில் இருந்து 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட ஆணையம் ஆர்டர்!

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்து உள்ளது .

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்துள்ளது. ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வளத் துறை ஆணையர் மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினர் – செயலராக மத்திய நீர்வளத்துறை தலைமைப் பொறியா ளர் ஏ.எஸ்.கோயல், உறுப்பினர்களாக மத்திய அரசு மற்றும் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச் சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், ஆணையம் அமைத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடகா முடிவு எடுத்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை செயலா ளர் எஸ்.கே.பிரபாகர், கர்நாடகா சார்பில் நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங், கேரளாவின் நீர்வளத் துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி சார்பில் பொதுப்பணித் துறை ஆணையர் அன்பரசு ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் கூட்டம் என்பதால் இதில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்டம மாநிலங்களில், எதிர்பார்ப்பு எழுந்தது. ஆணையம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது, நிரந்தர அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்குவது போன்ற அடிப்படை விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் மொத்தம் 34.24 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், ஜூன் மாதத்தில்ல கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. எனவே அந்த 3 டிஎம்சி தண்ணீர் போக 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘முதல்கூட்டம் நல்லமுறையில் நடந்தது. மிகப்பெரிய நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இனிமேல் காவிரி விவகாரத்தில் சட்டபூர்வமான முடிவுகள் சரியான முறையில் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.

இந்த ஆண்டு போதுமான அளவு பருவமழை பெய்து வருகிறது. ஜூன் மாதத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் போதுமான மழை பெய்துள்ள நிலையில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுபடி தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

தமிழகத்திற்கு திறக்க வேண்டிய அளவை விடவும் ஜூன் மாதத்தில் கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா சார்பில் தெரிவிக்கப்பட்டு, விவரங்கள் சமர்பிக்கப்ப்டடன. இதை ஆணையம் ஏற்றுக் கொண்டது. எனவே ஜூலை மாதத்துக்கு 3 டிஎம்சி தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இந்த முடிவை கூட்டாகவே எடுத்துள்ளோம்’’ எனக் கூறினார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையிலும் கர்நாடகா மறுத்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஹூசேன், சட்டபூர்வமாக எடுக்கப்பட்ட முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.