காவல்துறை கமிஷனரின் கெடுபிடி:: தேங்கிய கோப்புகளின் எண்ணிக்கை 14 ஆயிரம்! – AanthaiReporter.Com

காவல்துறை கமிஷனரின் கெடுபிடி:: தேங்கிய கோப்புகளின் எண்ணிக்கை 14 ஆயிரம்!

முன்பெல்லாம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் போடப்படும் எப்.ஐ.ஆர்.,களுக்கு அந்த பிரிவை கவனிக்கும் கூடுதல் கமிஷனர் (குற்றம்) அனுமதியிருந்தால் போதுமானது.ஆனால் தற்போதைய கமிஷனர் ‘எனக்கு தெரியாமல் எந்த எப்.ஐ.ஆரும் போடக் கூடாது’ என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய அனுமதிக்காக பல எப்.ஐ.ஆர்., கள் காத்திருக்கின்றன. இவ்வாறு அவரின் நடவடிக்கைக்கு காத்திருக்கும் கோப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 14 ஆயிரம் என கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
sep 25 - chennai police
கமிஷனர் அலுவலகத்தின் தற்போதைய நிர்வாகத்திற்கான சிறந்த உதாரணம்,சென்னையை சேர்ந்த தொடர் புகார் தாரர் அந்தஸ்து பெற்ற வாலிபர் ஒருவரின் சோகமான அனுபவங்கள் தான்.திருமண தகவல் மையம் மூலம் அந்த வாலிபர், மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வசதியான பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வெளிநாட்டில் படித்த அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள், திருமணத்திற்கு பின்னும் ‘நட்பை’ தொடர்ந்தனர்.நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபர் மனைவியிடம் விவாகரத்தை கேட்க குடும்பத்தில் பிரச்னை துவங்கியது. விவகாரம் இருவர் வீட்டிலும் தெரிய வந்ததும் பெண் வீட்டார் ,அந்த வாலிபரை வீட்டோடு மருமகனாக வரும்படி அழைத்து உள்ளனர். இதற்கு வாலிபர் மறுக்க தம்பதியினர் இடையே பிரிவு ஏற்பட்டது. சட்டப்படி பிரியாமல் இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.பிரிந்த கணவனை பழிவாங்கும் நோக்கில் பிற பெண்களோடு அந்த வாலிபர் இருப்பது போல புகைப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் அந்த பெண் வெளியிட்டார் அதிர்ச்சி அடைந்த வாலிபர் கமிஷனர் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அதை விசாரித்த போலீசார் அந்த பெண்ணை அழைத்து வெறுமே பேசி அனுப்பி வைத்தனர்.இதனால்
அந்த வாலிபருக்கு அந்த பெண்ணிடம் இருந்து பல்வேறு விதங்களில் துன்பம் தொடர்ந்தது. இதையடுத்து
போலீசார் இந்த பிரச்னையை தீர விசாரிக்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை அந்த வாலிபர் பெற்றார். அதற்கு பின்பும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.தொடர்ந்து அமைச்சர் ஒருவரின் சிபாரிசு உடன் கமிஷனரை சந்திக்க அந்த வாலிபர் நேரம் கேட்டார். ஆனால் கமிஷனர் அவரைச் சந்திக்காமல் கீழ் அதிகாரியை சந்திக்கும்படி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.இதுபோல் பலமுறை பந்தாடப்பட்டதால் இறுதியாக கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த வாலிபர் மீண்டும் கமிஷனர் அலுவலக மக்கள் குறைதீர் முகாமில் புகார் அளித்து விக்கிரமாதித்தன் கதையாக அலைந்து கொண்டு இருக்கிறார்.

அந்த வாலிபரின் நிலையை போல் தான் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் பெரும்பாலானோரின் நிலையும் உள்ளது. ஒரு முறை வந்து புகார் கொடுத்தவர்களே ஒவ்வொரு வாரமும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து தங்கள் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.கந்துவட்டி, சீட்டு மோசடி, இணையதளம் மூலம் மோசடி, நில அபகரிப்பு, பெண் வன்கொடுமை, சைபர் கிரைம், பெற்றோரை குழந்தைகள் தவிக்கவிடுதல் உள்ளிட்டவற்றின் கீழ், தினசரி குறைந்த பட்சம் 100 புகார்கள் கமிஷனர் அலுவலகத்திற்கு வருகின்றன.இவற்றில் பெரும்பாலானவை நேரடி புகார்களாக இருக்காது.

ஏற்கனவே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் மேல் முறையீட்டு புகார்களாக இருக்கும்.இந்த புகார்களை விசாரித்து அவற்றின் தன்மையை பொறுத்து சம்பந்தப்பட்ட இணை கமிஷனர் அலுவலகம் அல்லது மத்திய குற்றப் பிரிவிற்கு கமிஷனர், தன் பரிந்துரையோடு அனுப்ப வேண்டும். ஆனால் தற்போது பெரும்பாலான கோப்புகள் கமிஷனர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவது இல்லை.

இவ்வாறு அனுப்பப்படாமல்,நடவடிக்கைக்கு காத்திருக்கும் கோப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 14 ஆயிரம் என கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றில் போலீசாரின் பணியிடமாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான கோப்புகள், குண்டர் சட்டம் தொடர்பான கோப்புகள் மத்திய குற்றப் பிரிவில் விசாரணை முடிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்வதற்கான கோப்புகள் அடக்கம்.மத்திய குற்றப்பிரிவிற்கு அனுப்பப்பட வேண்டியவை மட்டும் ஏறத்தாழ 3,000 கோப்புகள் என தெரிகிறது.மனைவியால் பாதிக்கப்பட்ட வாலிபரின் புகாரும் இந்த கோப்பு குவியலுக்குள் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்பெல்லாம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் போடப்படும் எப்.ஐ.ஆர்.,களுக்கு அந்த பிரிவை கவனிக்கும், கூடுதல் கமிஷனர் (குற்றம்) அனுமதியிருந்தால் போதுமானது.ஆனால், ‘தற்போதைய கமிஷனர் ‘எனக்கு தெரியாமல், எந்த, எப்.ஐ.ஆரும் போடக் கூடாது’ என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய அனுமதிக்காக, பல, எப்.ஐ.ஆர்., கள் காத்திருக்கின்றன. ஒரு சில ‘சிறப்பு’ வழக்குகளில் மட்டும் எப்.ஐ.ஆர்.,கள் வேகமாக பதிவு செய்யப்படுகின்றன.சென்னை மாநகர கமிஷனர்கள் பெரும்பாலும் மக்கள் குறைதீர் முகாம்களில் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வர். ஆனால் தற்போது கூடுதல் கமிஷனர் தான் மக்களை சந்தித்து வருகிறார். கமிஷனர் பொதுமக்களை சந்திப்பதில்லை என்ற குறை குறைதீர் முகாம்களுக்கு வரும் அனைவர் மத்தியிலும் இருக்கிறது.தற்போது சென்னையில் ஒவ்வொரு நாளும், குறைந்தபட்சம் ஒரு கொலை நடந்து வரும் சூழலில், புகார்கள் மீதான உடனடி நடவடிக்கை எந்த ஒரு சிறிய தகவலையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல், மக்களுடன் இணக்கம் ஆகிய வற்றில் மாநகர போலீஸ் கமிஷனர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

தகவல் :::www.dinamalar.com/