காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ? – ராமதாஸ் வேதனை – AanthaiReporter.Com

காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ? – ராமதாஸ் வேதனை

ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்து சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்திவரும் பார்வையற்றவர்கள் மீது தடியடி நடத்துதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ என்ற வேதனை ஏற்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
sep 21 -RAMADASS
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல்துறை தான் இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக திகழ்கிறது என்று முதல்வர் தொடர்ந்து பெருமிதம் தெரிவித்து வருகிறார். ஆனால், கள நிலைமைகளோ அதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 13 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளில் 4 இரட்டைக் கொலைகளும் அடங்கும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் நேற்று ஒரேநாளில் 6 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்படுவதாக முதல்வர் கூறி வருகிறார். ஒரேநாளில் 13 பேர் படுகொலை செய்யப்படுவது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படும் லட்சனமா? என்பதை முதலமைச்சரும், காவல்துறை தலைமையும் தான் விளக்க வேண்டும்.கொலை, கொள்ளை தொடர்பான சதித்திட்டங்களை முன்கூட்டியே அறிந்து, அவற்றை தடுக்க உளவுத் துறை தவறிவிட்டது.

இன்னொருபுறம் ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்து சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்திவரும் பார்வையற்றவர்கள் மீது தடியடி நடத்துதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. அதன் உச்சகட்டமாக சென்னையில் நேற்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பார்வையற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்ற காவல்துறையினர், அவர்களை சென்னையிலிருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மதுராந்தகத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

10 மீட்டர் தூரமுள்ள சாலையை கடக்கவே மற்றவர்களின் துணை தேவைப்படும் பார்வையற்றவர்களை நள்ளிரவில் 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்று தவிக்கவிடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த முன்னாள் முதலமைச்சர், காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டதாக கூறியிருந்தார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ என்ற வேதனை ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.