காற்றாலை ‘கை’ விட்டதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்! – AanthaiReporter.Com

காற்றாலை ‘கை’ விட்டதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்!

கடந்த வாரம் ஆயிரம் மெகாவாட்டை கடந்த காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 90 மெகாவாட்டாக சரிந்தது. இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீடிக்கிறது.அதிலும் புத்தாண்டையொட்டி அடுத்த 2 நாட்களுக்கு வணிக நிறுவனங்களில் மின் விளக்குகள் அலங்காரம் போன்றவற்றால் மின் நுகர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பகல் நேரங்களில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Electricity_30
தமிழகத்துக்கு தினமும் 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின் உற்பத்தியில் சுமார் 2 முதல் 3 ஆயிரம் மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்படுகிறது. மின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே நீடிக்கும் பற்றாக்குறை காரணமாக, அவ்வப்போது மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக நடைபெறும் போது மின்வெட்டு இல்லாமல் ஓரளவு சமாளிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக காற்றாலை மின் உற்பத்தியும் மிகவும் மந்தமாக உள்ளது.இந்நிலையில், கடந்த வாரம் தொடர்ச்சியாக 4 நாட்கள் காற்றாலை மூலம் அதிக மின் உற்பத்தி ஏற்பட்டது. அதிகபட்சமாக ஒரே நாளில் 1,200 மெகாவாட் கிடைத்தது.

ஆனால், தற்போது, காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் இறங்குமுகமாகி விட்டது. நேற்று முன்தினம் இரவு அதிகபட்சமாக காற்றாலையில் இருந்து 110 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இது, நேற்று அதிகாலை வெறும் 90 மெகாவாட்டாக குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 354 மெகா வாட் மின்சாரம் காற்றாலைகளில் இருந்து கிடைத் தது. காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் சரிந்திருப்பதால், தமிழகத்தில் மின் பற்றாக்குறையும், மின் வெட்டும் தொடர்கிறது. இதனால், பகல் நேரங்களில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.