காமன்வெல்த் போட்டி கோலாகலமா ஆரம்பிடுச்சு! 2 லட்சத்து 25 ஆயிரம் ஆணுறைகள் சப்ளை! – AanthaiReporter.Com

காமன்வெல்த் போட்டி கோலாகலமா ஆரம்பிடுச்சு! 2 லட்சத்து 25 ஆயிரம் ஆணுறைகள் சப்ளை!

உலக அளவில் மிகப் பிரபலமான ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாதான் காமன்வெல்த் போட்டி. கடந்த 1930ம் ஆண்டு முதல், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் – இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து, நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 21வது தொடர், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில், இன்று தொடங்கியது. மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, கனடா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா, ஜமைக்கா, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில், 218 வீரர், வீராங்கனைகள், 17 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். அவர்களில் பேட்மின்டன் வீரர், வீராங்கனைகளான கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால், துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளான ஜித்து ராய், ஹூனா சித்து, மனு பாகர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர், வீராங்கனைகளான சுஷில் குமார், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபகாலமாக காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. எனவே இம்முறையும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

கடற்கரை நகரமான கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க விழா அணி வகுப்பில் இந்திய அணிக்கு இறகுப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி சென்றார். தினசரி போட்டிகள் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த போட்டியை சோனி சிக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. வரும் 15ம் தேதியுடன் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைகின்றன.

அடிசினல் ரிப்போர்ட்:

இதனிடையே இப்போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் பங்கேற்க உள்ள சுமார் 6,000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதில் 11 நாட்கள் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் நாளொன்றுக்கு 3 ஆணுறை பயன்படுத்தும் விதமாக மொத்தம் 34 ஆணுறைகள் வழங்கப் பட்டுள்ளன. அண்மையில் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டன. 

இதேபோல் ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்றவர்களுக்கு அதிகபட்சமாக 4 லட்சத்து 50 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.