கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையை அடிக்கிற தாயைப் போலத் தொழிலாளர்கள்! – AanthaiReporter.Com

கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையை அடிக்கிற தாயைப் போலத் தொழிலாளர்கள்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், உயர்நீதிமன்றத்தின் ஆணை இவற்றை விளங்ங்கிக் கொள்ள இந்தப் பதிவு உதவலாம். இரு தரப்புக் கருத்துகளையும் தொகுத்திருக்கிறேன்

1.பிரச்சினை என்ன?

மூன்றாண்டுகளுக்கொரு முறை போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. 2013 செப்டம்பரில் போடப் பட்ட ஊதிய ஒப்பந்தங்கள் 2016 ஆகஸ்ட்டோடு முடிந்தது. அடுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கின.கடந்த 16 மாதங்களில் 23 மூன்று முறை அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன.

2.பேச்சு வார்த்தையில் என்ன முட்டுக்கட்டை?

இரண்டு பிரச்சினைகள் பிரதானமாக இருந்தன. தொழிற்சங்கங்கள் 50% ஊதிய உயர்வு கேட்டன. அரசில் ஊதிய உயர்வுகள் காரணிகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. 50% என்பது மூன்று காரணிகள். ஆனால் அரசு அதை ஏற்க மறுத்தது 2.3 காரணிகள் அளவிற்குக் கொடுக்கிறோம் என்றது. பின் இரு தரப்பும் சற்று நெகிழ்ந்து வந்தன. தொழிற்சங்கங்கள் 2.57 காரணிகள் என் அளவிற்கு வந்தன. அரசு 2.44 காரணிகள் என்ற அளவிற்கு வந்தது. இரண்டிற்கும் இடையே வித்தியாசம் ஒரு காரணிக்கும் கீழாக 0.13 தான். ரூபாய்க் கணக்கில் பார்த்தால் இது சுமார் ரூ.600 இருக்கும்.

3. இந்தச் சிறிய தொகையை அரசு ஏன் விட்டுக் கொடுக்க மறுக்கிறது?

தொழிற்சங்கங்கள் 2.57 எனக் கேட்பது அரசு ஊழியர்களுக்கு நிகராக. ஆனால் அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஊதிய ஓப்பந்தங்கள் போடப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை. எனவே அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் என்றால் 2.57 என்ற காரணியை ஏற்கத் தயார் என்கிறது. தொழிலாளர்கள் அதை ஏற்கத் தயாரில்லை. பொதுத்துறை நிறுவனங்களைப் போல 4 ஆண்டுகள் என்றது அரசு. அதையும் தொழிற்சங்கங்கள் ஏற்கத் தயாரில்லை. ஜனவரி 4 ஆம் தேதி ஒப்பந்தத்தில் அரசு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை என்ற கோரிக்கையை ஏற்றிருக்கிறது.

4.தொழிலாளர்கள் ஏன் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் என்பதை ஏற்கத் தயங்குகிறார்கள்?

அரசுத் துறையில் இருப்பவர்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள். நாங்கள் கூடுதலாக வேலை செய்கிறோம். தீபாவளி, பொங்கல் நாள்களில் கூட குடும்பத்தோடு இல்லாமல் பயணிகளை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்கிறோம் என்கிறார்கள். எனவே அவர்கள் பணியையும் எங்கள் பணியையும் ஒப்பிட முடியாது என்கிறார்கள்

5.நியாயம்தானே?

அரசுத் துறையிலும் அப்படி உழைப்பவர்கள் இருக்கிறார்கள் என காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மின் வாரியம், தீயணைப்பு போன்ற துறைகளை அரசு சுட்டிக் காட்டுகிறது. பணிகள் வெவ்வேறு தன்மை கொண்டவை. ஒவ்வொரு பணியிலும் ஒரு வகையான சிரமம் இருக்கும். அதை அறிந்துதான் அந்தப் பணியில் சேர்கிறார்கள். ஒப்பீடுகள் உதவாது.

ஆசிரியர்களுக்கு விடுமுறை அதிகம் என ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் அவர்களுக்குக் குறைந்த சம்பளம் கொடுத்தால் போதுமானது என்றால் அது நியாயமாகுமா? ஒரே பணியைக் கூட ஒப்பிட முடியாது.நெடுந்தூரம் செல்லும் விரைவுப் பேருந்தை ஓட்டுபவரது பணியும். நகர நெரிசலில் நகரப் பேருந்து ஓட்டுபவரது பணியும் ஒரே மாதிரியானவை அல்ல. உயர் நீதி மன்றத்திற்கு விடுமுறை உண்டு. கீழமை நீதி மன்றத்திற்குக் கிடையாது. வெள்ளம், புயல், கலவரம் போன்ற கடுமையான சூழலில் கூட களத்தில் இருக்கும் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வேண்டியிருக்கிறது. அரங்கத்தில் ஏசி அறைக்குள் அமர்ந்து கொண்டு செய்தி வழங்கும்/விவாதங்கள் நடத்தும் செய்தியாளர்கள் வேலை அத்தனை கடினமானதல்ல என்று களச் செய்தியாளர்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு வேறு திறமைகள் வேண்டும்.வெயிலில் நின்று பணிகளை மேற்பார்வையிடும் site engineer வேலை, அறையில் உட்கார்ந்து கட்டிடத்தை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட்டின் வேலையை விட சுலபம் எனத் தோன்றலாம். ஆனால் இல்லை. வேலைகளை ஒப்பிடுவது எல்லா நேரங்க்களிலும் சரியாய் இராது.

6. ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டதா இல்லையா?

கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒப்பந்தங்களை விட இம்முறை போடப்பட்டுள்ள ஒப்பநதத்தில்தான் மிக அதிக உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு சொல்கிறது. ஓட்டுநர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ 2684. அதிக படசமாக ரூ 10 322. கண்டக்டருக்கு குறைந்த பட்சமாக ரூ 2706. அதிக பட்சமாக ரூ.11.361 (பணி மூபபின் அடிப்படையில் ஊதியங்கள் கூடும். நீண்ட காலம் பணியாற்றியவர் கூடுதலாக ஊதியம் பெறுகிறார்) புதிதாக பணியில் சேர்பவர் முன்பு ரூ 6900 பெற்று வந்தார். இனிமேல் ரூ 17,700 பெறுவா

7.பிரதான பிரச்சினைகள் இரண்டு என்று சொன்னீர்கள். ஒன்றைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்

வருகிறேன். மற்றொரு பிரச்சினை ஓய்வூதிய நிலுவைத் தொகை. நிலுவைக்குக் காரணம், அரசு அந்தத் தொகையை அன்றாடச் செலவுகளுக்கு பயன்படுத்தி விட்டது. அது முட்டாள்தனமான முடிவு. டீசல் விலை உயர்ந்தது, மத்திய அரசு மானிய விலையில் தர மறுத்தது, பேருந்துக் கட்டணங்களை உயர்த்த முடியாத நிலை எனக் காரணம் சொல்கிறது. கட்டணங்களை உயர்த்த முடியாமைக்குக் காரணம் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சம்தான் என்பது என் கருத்து.

அரசியல் கட்சிகள் கட்டண உயர்வை அரசியலாக்கி ஆதாயம் தேடியிருக்கும் என்ற கவலைதான். இது நம் அரசியல் கலாசாரம் சம்பந்தப்பட்டது. 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரூ1400 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது என அரசு சொல்கிறது. இந்தப் பிரசினை உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தைக் கொண்டு இதை சரிசெய்ய நீண்ட காலம் பிடிக்கும். வேறு வழிகளை முயற்சிக்க வேண்டும். அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவது குறித்து யோசிக்கலாம்

8. நீதி மன்றம் பணிக்குத் திரும்பாவிட்டால் வேலை நீக்கம் எனச் சொல்வது சரியா?

ரூ 600 அளவில் உள்ள சிறிய தொகைக்காக முரண்டு பிடித்து மக்களை நடுவழியில் இறக்கிவிடுவது அராஜகமான செயல் என நீதிமன்றம் கருதுகிறது எனத் தோன்றுகிறது. தொழிலாளர்கள் அவர்களது உரிமையைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு இடம் விட்டு இடம் செல்லும் உரிமை மறுக்க்கப்படுகிறதே என அது கேட்கிறது.எண்ணிக்கைக் கணக்கிலும் சிரமத்தின் தன்மையிலும் பார்த்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தொழிலாளர்களை விடப் பொதுமக்கள்தான். “முன்னறிவிப்பு இல்லாமல் மின்னல் வேக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குடிமக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமையை மறுக்கிறது. இது தெளிவாக சட்ட விரோதமானது, பொது நலனுககு எதிரானது” என்று டிவிஷன் பெஞ்ச் தெரிவித்திருக்கிறது

கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையைப் போட்டு அடிக்கிற தாயைப் போலத் தொழிலாளர்கள் நடந்து கொண்டு விட்டார்கள் என்பது என் கருத்து

9. தீர்வு என்ன?

1 போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து அவர்களை 10 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரலாம்.

2. போக்குவரத்துத் துறையில் உள்ள அரசின் ஏக போகத்தை நீக்க, மற்ற துறைகளில் உள்ளது போல, தனியாரையும் அனுமதிக்கலாம்.(கட்டணங்களை வரையறுத்து)

3. காலப் போக்கில் தனியார் செயல் படாத (லாபம் இன்மை காரணமாக) தடங்களில் சேவை கருதி அரசு தனது பேருந்துகளை இயக்கலாம். அதையும் கூட் உள்ளாட்சி அமைப்புகளின் வசம் ஒப்படைக்கலாம்.(இயக்கத்தை மட்டும். அரசு பேருந்துகளில் முத்லீடு செய்து அதை குத்தகை அல்லது EMI அடிப்படையில் உள்ளாட்சிக்ளுக்குக் கொடுக்கலாம்)

 மாலன் நாராயணன்