கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளில் நடந்த மோசடிகளின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 718 கோடி மட்டுமே!. – AanthaiReporter.Com

கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளில் நடந்த மோசடிகளின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 718 கோடி மட்டுமே!.

நாட்டில் பல்வேறு விவசாயிகள் வங்கிக் கடன் வாங்கி கட்ட முடியாமல் தர்கொலை செய்து கொண்டதாக அடிக்கடி வரும் செய்திகளை முந்திக் கொண்டு இந்திய வங்கிகளில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் மற்றும் அதன் மதிப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிடிஐ செய்தி நிறுவனம் மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி பதில் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது இதோ:

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் மொத்தமாக 23 ஆயிரத்து 866 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதில் 2017 ஏப்ரல் முதல் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 5 ஆயிரத்து 152 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகி யுள்ளன. இதன் மதிப்பு ரூ.28 ஆயிரத்து 459 கோடியாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் நடந்த வங்கி மோசடிகளில் இந்தத் தொகையே மிக அதிகமாகும்.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ரூ.23 ஆயிரத்து 933 கோடி மதிப்புடைய 5,076 மோசடி வழக்குகளும், 2015-16 ஆம் ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 698 கோடி மதிப்பு கொண்ட 4,693 வழக்குகளும், 2014-15 ஆம் ஆண்டில் ரூ.19 ஆயிரத்து 455 கோடி மதிப்புடைய 4,639 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

2013-14 ஆம் ஆண்டில் 4,306 வழக்குகளும், அதன்மூலம் ரூ.10 ஆயிரத்து 170 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 718 கோடியாகும்.

இந்த மோசடி வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மோசடி வழக்குகளில் அண்மையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி செய்த ரூ.13,000 கோடி மோசடி அடங்கும். இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிரவ் மோடி, மெகுல் சோக்சி மீது விசாரணை நடத்தி வருகிறது.

அதே போன்று, ஐடிபிஐ வங்கியில் நடந்த ரூ.600 கோடி மோசடியில், கடந்த 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை பதவி வகித்த 15 வங்கிகளின் மூத்த அதிகாரிகள், ஏர்செல் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு கடந்த டிசம்பர் மாதத்துடன் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்து 958 கோடியாக உயர்ந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்துறையினர், சேவைத்துறையினர், வேளாண் துறையினர் ஆகியோர் கடனை திருப்பிச் செலுத்தாததால் வாராக்கடன் தொகை அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2,01,560 கோடி வாராக்கடன் நிலுவையில் உள்ளது.

அடுத்த இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.55 ஆயிரத்து 200 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.44 ஆயிரத்து 542 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ.43 ஆயிரத்து 474 கோடி, பேங்க் ஆப் பரோடா ரூ.41 ஆயிரத்து 649 கோடி வாராக்கடன் உள்ளது.

கனரா வங்கிக்கு வாராக்கடனாக ரூ.37 ஆயிரத்து 794 கோடி, ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.33 ஆயிரத்து 849 கோடி நிலுவையில் இருக்கிறது.