ஏழு பேர் விடுதலைக்கு பரிந்துரை! – தமிழக அமைச்சரவை தீர்மானம்! – AanthaiReporter.Com

ஏழு பேர் விடுதலைக்கு பரிந்துரை! – தமிழக அமைச்சரவை தீர்மானம்!

பேரறிவாளன், சாந்தன் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7பேரும் 26 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்துவருகின்றனர். ஏழு பேரின் விடுதலை தொடர்பாக கடந்த 6ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும், இதுகுறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பலாம்” என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஏழு பேர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

அதே சமயம் ஏழுபேரையும் விடுதலை செய்வதுதான் அரசின் நோக்கமென அமைச்சர்கள் ஜெயக் குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இது  தொடர்பான முடிவெடுப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று(செப்டம்பர் 9) மாலை 4 மணியளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

மாலை 4 மணிக்கு கூடிய அமைச்சரவைக்கூட்டம் 6 மணிக்கு முடிவடைந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானமாக நிறைவேற்றி உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துவிட்ட நிலையில், சட்டப்பிரிவு 161இன் கீழ் ஏழுபேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தவர், “இன்றே இத் தீர்மானம் ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்படும். அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் மொத்த தமிழகமும் விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

மேலும்,“திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவரும் சமூக நீதிக்காகப் பாடுபட்டவருமான முன்னாள் முதல்வர் அண்ணாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மத்திய ரயில்வே நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.