எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை என்ன தெரியுமா? கமல், ரஜினிக்கு எடப்பாடி எச்சரிக்கை! – AanthaiReporter.Com

எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை என்ன தெரியுமா? கமல், ரஜினிக்கு எடப்பாடி எச்சரிக்கை!

நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்பவர்கள், மக்கள் களத்திற்கு வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் எம்.ஜி.ஆர். ஆக உயர்கிறார்களா? இல்லையா? என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தற்போது அரசியலில் குதிக்க போகிறேன் என கூறும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மறைமுகமாக முதல்வர் இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) கடும் பதிலடி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் பசுமையான காட்டில் திடீரென தீ பற்றியது என அதிமுகவின் நிலவரத்தை உருக்கமான கதை மூலம் முதல்வர் இபிஎஸ் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

பெரம்பலுாரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவில் முதல்வர் இபிஎஸ் பேசியதாவது, “”திரைவாழ்வி லும்  அரசியல் வாழ்விலும் புரட்சித்தலைவரைப் போல இருக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள், பொதுவாழ்வில் புரட்சித்தலைவரைப் போல பொதுமக்களுக்காக உதவிகள் செய்ய வேண்டும். நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் வரும்போதும், வறட்சியால் பாதிக்கப்படும் போதும் ஓடி வந்து உதவ வேண்டும். மக்களால் சம்பாதித்த பணத்திலிருந்து மக்களுக்காக ஒரு குதியை செலவு செய்ய வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் போல ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காக பல தியாகங்களைச் செய்ய வேண்டும். மற்றவர்களை விமர்சனம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் ஒருகாலமும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.

தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஒரே எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் முடியும் . புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும், அரசியலிலும் எவரும் வீழ்த்த முடியாத அதிசய மனிதர். ஒரு நாட்டை ஒரு கலைவேந்தன் ஆள வேண்டும் என்று 200 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவஞானி பிளாட்டோ கனவு கண்டார். அந்தக் கனவை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் முதன்முதலில் நனவாக்கி காட்டினார். வானத்தில் ஒரே பகலவனை, ஒரே சந்திரனைத்தான் பார்க்க முடியும். அதே போல எம்.ஜி.ஆர் என்பவர் இந்த உலகத்தில் ஒருவர்தான் இருக்க முடியும். நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்பவர்கள், மக்கள் களத்திற்கு வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அவர்கள் எம்.ஜி.ஆர். ஆக உயர்கிறார்களா? இல்லையா? என்று மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் மனக்கோட்டையை பிடிக்க இயலாதவர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை ஒருகாலமும் பிடிக்க முடியாது. “புரட்சித்தலைவரின் தீர்க்கதரிசனமும் திறமைமிக்க நிர்வாகமும், தலைமையும் தமிழகத்தில் ஒரு பொற்காலத்தைத் தோற்றுவித்துள்ளது”என்று அரிசோனா பல்கலைக்கழக அறக்கட்டளைக் குழுவினர் ஒரு பேட்டியில் கூறியுள்ளனர். மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர் புரட்சித்தலைவர் ஏழைகளின் இறைவன், எல்லோருக்கும் தோழர், நல்லோர்க்குச் சோலை, தீயோரை திருத்தும் திருக்குறள்.” என்றார்