எனக்கு ஜெயலலிதாவின் சொத்துக்கள் வேண்டாம்! – ஜெ. மகள் (?) அம்ருதா பேட்டி! – AanthaiReporter.Com

எனக்கு ஜெயலலிதாவின் சொத்துக்கள் வேண்டாம்! – ஜெ. மகள் (?) அம்ருதா பேட்டி!

2014-ம் ஆண்டு ஜெ. பெங்களூரு சிறையில் இருந்தபோது, “நான்தான் ஜெ-வின் தங்கை” என்று பெங்களூருவாசிகளிடமும், பத்திரிகையாளர்களிடமும் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியவர் சைலஜா. இவருடைய மகள்தான் இந்த அம்ருதா என்ற மஞ்சு. தற்போது இவர்தான், ”நான்தான் ஜெ-வின் மகள்” என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளார்.

ஆக மறைந்து போன ஜெயலலிதாவின் மகள் என்று கூறி  தற்போது பரபரப்பை ஏற்படுத்தி  வரும் பெங்களூர் பெண் அம்ருதா அண்மையில் கொடுத்த பேட்டியின் போது, “நான் ஜெயலலிதா மகள் என்பது இவ்வளவு நாளும் எனக்கு தெரியாது. அவரது சொந்த தங்கை சைலஜாவின் மகள் என்று தான் நினைத்திருந்தேன். என்னை வளர்த்த தந்தை சாகும் போதுதான் நீ ஜெயலலிதாவின் மகள் என்று சொன்னார். என்னை வளர்த்த தாய் 2015-ல் இறந்து விட்டார். வளர்த்த தந்தை பார்த்த சாரதி 2017 மார்ச்சில் இறந்து விட்டார். நான் ஜெயலலிதாவின் மகள் என்று வளர்ப்பு தந்தை சாகும் போது சொன்னதால் அதை உடனடியாக என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. அதன் பிறகு உறவினர்களிடம் விசாரித்த பிறகு தான் ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பது உண்மை. அது நீதான் என்றனர்.

எல்லோரும் ஜெயலலிதாவிடம் சத்தியம் செய்திருந்ததால் சாகும் வரை அவர்கள் இதை வெளியில் சொல்லவில்லை. இப்போது உறவினர்கள் உறுதி செய்த பிறகுதான் இதை வெளியில் சொல்கிறேன்.சைலஜா ஜெயலலிதாவின் தங்கை. அவருக்கு குழந்தை இல்லை. அதனால் என்னை கொடுத்து வளர்க்க செய்தார்.

நான் 1996-ம் ஆண்டு ஜூன் 6-ந்தேதி முதல் முதலாக ஜெயலலிதாவை பார்த்தேன். எனக்கும் வளர்ப்பு தாயார் சைலஜாவுக்கும் அவ்வப்போது சண்டை நடக்கும். அப்போது நீ எங்காவது சென்று விடு என்று கூறினார். நான் எங்கே போக என்று கேட்டேன்.

அப்போது ஒரு அட்ரசை கொடுத்து உங்க பெரியம்மா வீட்டுக்கு போ என்று கூறினார். எனக்கு ஒரு லட்டர் கொடுத்து அவருக்கு போன் செய்து பேசினார். அப்போது தான் போய் ஜெயலலிதாவை பார்த்தேன். பெரியம்மா ஒரு முதல்-அமைச்சர் என்பதே எனக்கு தெரியாது.2014-ம் ஆண்டு சைலஜா கொடுத்த பேட்டியில் ஜெயலலிதாவை நான் சந்தித்ததில்லை. அம்ருதாவும் தூரத்தில் இருந்துதான் பார்த்திருக்கிறார் என்று கூறியது பொய்.

நான் ஜெயலலிதாவை முதன் முதலாக சந்தித்த போது ஆட்சி பறிபோனதால் மனுஅழுத்தத்தில் இருந்தார். ஆனால் என்னைப் பார்த்ததும் மகளை எப்படி பார்ப்பார்களோ அப்படி பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரை பலமுறை சந்தித்ததால் அதற்கு ஆதாரமாக சி.சி.டி.வி. இருக்கலாம். இசட் கேட்டகிரி பதிவேட்டில் இருக்கும்.

நான் 1980-ல் பிறந்தேன். நான் லலிதா, ரவீந்திரநாத் ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மை. உன்னை பார்த்தால் சந்தியா போலவும், ஜெயலலிதா போலவும் இருக்கிறாய். சைலஜாவிடம் வளர்கிறாய். நீ ஜெயலலிதாவின் மகளாக இருக்கலாம் என்றனர்.

ஆனால் சசிகலா ஜெயலலிதா உறவினர்கள் யாரையும் அருகில் கூட சேர்க்கவில்லை. ஜெயலலிதா தனது சகோதரி என்று சைலஜாவும் 2014-ம் ஆண்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு கேட்டுள்ளார். நான் ஜெயலலிதா மகள் என்பது டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனது தாத்தாவின் தங்கை ஜெயலட்சுமி. அவர் ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவின் அத்தைதான் ஜெயலட்சுமி. ஜெயலலிதா என்னிடம் நெருக்கமாக இருந்ததை வைத்துத்தான் அவரது மகள் நான் என்று தோன்றுகிறது.

1980-ம் ஆண்டு நான் ஜெயலலிதாவுக்கு பிறந்ததாக உறவினர்கள் கூறுகிறார்கள். எனது பிறப்பு சான்றிதழிலும் 1980 என்றுதான் உள்ளது. டி.என்.ஏ. பரிசோதனை செய்தால்தான் நான் ஜெயலலிதாவின் மகளா என்பதை நானே உறுதியாக தெரிந்து கொள்ள முடியும். அதுவரை எல்லோரும் காத்திருந்து தான் ஆகவேண்டும்.

ஜெயலலிதாவை நான் எப்போது சந்தித்தாலும் முதலில் அவரது கண்களில் கண்ணீர் வந்து விடும். அதன் பிறகுதான் கட்டிப் பிடிப்பார். அருகில் அமர்ந்து நிறைய தடவை முத்தம் கொடுப்பார். ஒரே தட்டில் சாப்பிட்டு இருக்கிறோம். ஒன்றாக தூங்கி இருக்கிறோம். தலைமை செயலகத்துக்கு செல்லும் போதெல்லாம் நீ எங்கேயாவது இரு. உயிரோடு இருந்தால் போதும் என்பார்.

கடைசி காலத்தில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்திருந்தால் நான் போனில் பேசி இருப்பேன். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டிருப்பேன். ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டிருந்தது. அப்துல்கலாம் இறந்த பிறகு திடீரென்று நான் ஜெயலலிதா வீட்டுக்கு சென்றேன். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவருடன் நான் போனில் பேசினேன். அப்போது அவர் என்னிடம் கன்னடத்தில் பேசினார். அம்ரு நான் வீட்டில் இருப்பதில்லை. அதனால் நீ வராதே என்றார். ஆனாலும் நான் அவரை பார்க்க போய் இருந்தேன். அப்போது அங்கிருந்த ஒருவர் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு போய் இருக்கிறார் என்று கூறினார். நான் விசாரித்த போது அவருக்கு வீட்டில் சிகிச்சை நடந்ததாக தகவல் கிடைத்தது.

ஜெயலலிதா ஒருமுறை சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்து மாலை சாற்றி விட்டு எங்கள் வீட்டுக்கும் வந்துள்ளார். அதற்கு முன்பு பல முறை வருவதாக கூறி இருந்தார். ஆனால் வருவதில்லை. அப்போது நான் அவரிடம் பேசி நான் மட்டும் தான் உங்கள் வீட்டுக்கு வர வேண்டுமா? நீங்கள் வரமாட்டீர்களா என்றேன். அவருக்கு வெஜிடபிள் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அவர் வரப்போகிறேன் என்று சொல்லும் போது அதை சமைத்து வைத்திருப்போம். ஆனால் அவர் வரமாட்டார். அதன் பிறகு அவர் வந்த போது பால் மட்டுமே குடித்து விட்டு சென்றார்.

ஆனால் அதை நாங்கள் படம் எடுக்கவில்லை. அவர் நள்ளிரவு 1.30 மணிக்கு வந்ததால் அக்கம் பக்கத் தினரும் பார்க்கவில்லை. அவர் என்னிடம் போனில் பேசுவதும் நள்ளிரவுக்கு பிறகுதான். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 3 முறை அவரை பார்க்க முயன்றேன். ஆனால் உள்ளே விடவில்லை. அவர் இறந்த பிறகும் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் சாவு இயற்கையானது இல்லை. அது கொலைதான். சிகிச்சை தொடர்பாக எந்த படங்களும் வெளியாகவில்லை.

விசாரணை கமிஷனால் புகைப்படங்களை அவர்கள் கொடுத்தால் எது உண்மை என்று தெரியும். ஜெயலலிதாவின் இறுதி சடங்கு வைணவ முறைப்படி செய்யப்படவில்லை. சசிகலாதான் அவருக்கு இறுதி சடங்கு செய்தார். தீபக் அருகில் மட்டும்தான் நின்று கொண்டிருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடையாது. அவர் புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடத்தப்பட வேண்டும். எனக்கு ஜெயலலிதாவின் சொத்துக்கள் வேண்டாம். அதை தமிழக மக்களே எடுத்துக் கொள்ளட்டும். எனக்கு கடவுள் கொடுத்த சொத்துக்கள் போதும். என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை”என்று அவர் தெரிவித்தார்.