எதை? எதற்காக? ஏன் கொண்டாடுகிறோம்? பெண்கள் தினம்!

எதை? எதற்காக? ஏன் கொண்டாடுகிறோம்? பெண்கள் தினம்!

பெண்கள் தினம் வந்துவிட்டது என்றால் எல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் அதைக் கொண்டாடிவிடுவது என்று சபதம் எடுத்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. எல்லோரும் என்றால் வர்த்தக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள்… என்று சொல்லிக் கொண்டே போகலாம். எதைக் கொண்டாடுகிறோம்? எதற்காகக் கொண்டாடுகிறோம்? எதைக் குறிக்கிறது இந்த நாள்? ஏன் பெண்கள் தினம்? சில தினங்களுக்கு முன்பு கூட பிஞ்சுப் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான செய்தியைப் படித்தோமே..!
edit mar 8
அன்று கலாஷேத்திராவில் பட்டாபிஷேக நாடகம் பார்த்தேன். சீதை, “வருவார் தன்னை மீட்பார்’ என்று யாரைப் பற்றி இடையறாது நினைத்துக் கொண்டிருந்தாளோ, அந்தக் கணவனை நோக்கி அடியெடுத்து வருகிறாள். “நீ யாரோடு வேண்டுமானாலும் போகலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. என் தருமம் நான் யுத்தம் புரிந்தேன்’ என்பது போல இராமன் பேசுகிறான். நமக்குப் பற்றிக் கொண்டு வருகிறது.சீதை, “சிதை மூட்டு’ என்று இளையவனிடம் கூறுகிறாள். பிறகு தீக்குளிக்கிறாள். அக்னி தேவன் “இராமா அவள் மாசற்றவள், ஏற்றுக் கொள்’ என்று கூறுவதாக வருகிறது. மாறாக அக்னி “சீதையே, இராமன் ஏதோ புரியாமல் சொல்லிவிட்டான். அவனை மன்னித்து ஏற்றுக்கொள்’ என்று சொல்லியிருக்கவேண்டும் என்று தோன்றியது; மனசு வலித்தது.

ஜெயகாந்தனின் சீசர் சிறுகதையில் சீதாராமய்யர் பெண்டாட்டியை நம்பாத ஆம்பளைகளைப் பற்றி சொல்லுவார். “போகட்டும்; பெண்களை உலகம் நம்பவேண்டும், நீ நிரூபி என்று அவளை வதைக்கக் கூடாது’ என்று இந்த மார்ச் 8-ஆம் தேதி உறுதி ஏற்றுக் கொள்வோம்.தம்பதிகள் இருவரில் யாரும் உயர்வு இல்லை; யாரும் தாழ்வும் இல்லை. இதில் சிதம்பரம் என்றும் மதுரை என்றும் பாகுபாடு செய்வது ஆபாசம் என்று கூடத் தோன்றுகிறது. இருவரும் சமம்.

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் இராமாயணத்தில் தர்மமீமாம்ஸ என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் உரையாடல் நடைபெற்றது. அதில் பேராசிரியர் உபாத்தியாயா என்பவர் மிக மென்மையான, அழகான நெகிழ்த்தும் காட்சியை விவரித்தார். காட்டுக்குப் போகவேண்டும் என்று முடிவாகிவிட்டது. கைகேயி ஓடிவந்து மரவுரி உடைகளைக் கொண்டு தருகிறாள். ஒவ்வொரு அடியும் அவள் கனவுக்கு அருகே கொண்டுபோகும் அல்லவா? இராமன் எங்கேயாவது மனதை மாற்றிக் கொண்டுவிட்டால்..? அதனால் விரைவாகக் கொண்டு தருகிறாள். இராமனும் அவளிடம் இருந்து அதைப் பணிவாகப் பெற்றுக் கொண்டு, தன் மேலிருந்த மிருதுவான உடையை விலக்கி இந்த கரடுமுரடான உடை உடுத்திக் கொள்கிறான். தம்பியும் அவ்வாறே செய்கிறான். இருவருக்கும் முன் அனுபவம்.

விசுவாமித்திரருடன் முனிவர்களின் தவத்தைக் காக்க, காட்டுக்குப் போயிருக்கிறார்கள் அண்ணனும் தம்பியும் இல்லையா? ஆனால், சீதைக்கு முன் அனுபவம் இல்லை. மாமியார் தந்த சீதனத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஒன்றும் புரியாமல், கண்களில் நீர் ததும்ப நிற்கிறாள். காட்டில் இருப்பவர்கள் எப்படி இதை உடுத்திக் கொள்வார்கள் என்று மலைக்கிறாள், திகைக்கிறாள். நொடியில் அவள் அருகே வருகிறான் இராமன். தானே உடுத்திவிடுகிறான். அதைக் கண்டு அங்கிருந்த மற்ற பெண்டிர் கண்ணீர் விடுகின்றனர். இது தான் காட்சி.இதை விவரித்து விட்டு பேச்சாளர் கேட்டார். இது போன்ற ஒரு காட்சியை வேறு ஏதாவது ஒரு காவியத்தில் படித்திருக்கிறோமா? எந்த காவிய நாயகன் இதைச் செய்திருக்கிறான்? என்று.

உண்மைதான்; மனைவி தவிக்கிறாள் என்றதும் உடுக்கை இழந்தவன் கை போலே வருகிறான் இந்த கணவன். அப்பொழுது எப்பேர்பட்ட நெருங்கிய நட்பு இருந்திருக்க வேண்டும் அவர்கள் இருவருக்கிடையே? இந்த மார்ச் 8 அன்று பெண்கள் கூடி தங்களுக்குத் தாங்களே பூ மாரி பொழிந்து கொண்டால் போதாது. எந்த அலுவலகத்தில், எந்த கல்லூரியில் ஆண்கள் முன்னின்று மார்ச் 8 தினத்தை அர்த்தபூர்வமாகக் கொண்டாடுகிறார்களோ அவர்களுக்கு ஒரு விழா எடுக்கலாம்.

ஆண்கள் அனைவரும், “பெண்கள் எங்கள் நண்பர்கள். அதிலும் என் மனைவி தான் என் “பெஸ்ட் ஃப்ரெண்ட்’ என்று முழங்கவேண்டும் இந்த மார்ச் 8 முதல். சீதை மரவுரி உடுத்திக்கொண்டு நிற்பது வசிஷ்டரின் மனதை உலுக்குகிறது. தாங்கவில்லை சீற்றம். கைகேயியைப் பார்த்துச் சொல்கிறார்: “நீ பெண்ணில்லை, பேய்; குலத்தை அழிக்க வந்தவள். அரசனை ஏமாற்றி வரம் வாங்கிவிட்டாய். சீதை காட்டுக்குப் போகமாட்டாள். இராமன் அவளை அரியாசனத்தில் அமர்த்துவான். மனைவியே ஒவ்வொருவரின் ஆத்மா. அவள் இராமனின் அரசை ஆளுவாள்’ என்று.

அவர் குலகுரு, அவருக்கு நியாயம், சட்டம், சாஸ்திரம் எல்லாம் தெரியும். நியாயத்திற்கு விரோதமாக ஒன்றை அவர் சொல்லியிருக்கவே மாட்டார். முன்னுதாரணம் இருந்திருக்கவேண்டும் அல்லது இப்படித் தான் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்; சும்மா சொல்லியிருக்க மாட்டார். பெண் ணால் அரசை திறமையாக நிர்வகிக்க முடியும், அவள் கணவனை விடக் குறைந்தவள் இல்லை; மாறாக, அவள் அவனின் உயிர்நாடி. அவள் சமம். வீட்டிற்கு வெளியே வர அவளுக்கு உரிமை இல்லை என்பது தவறு.

அரசு நிர்வாகம் அவள் கைக்கு வந்தால் எவ்வளவு பொறுப்புகளை அவள் ஏற்றிருப்பாள்? அது அவளால் முடியும் என்ற நம்பிக்கை அவர் சொற்களில் மின்னுகிறது. மார்ச் 8 “பெண்களால் முடியும்’, “பெண்கள் ஆண்களுக்கு சமம்’ என்ற இரண்டு மந்திரங்களை மனதில் பதிப்போம்.பெண்களைச் சந்தேகப்படமாட்டோம், பெண்கள் ஆண்களுக்கு நல்ல நண்பர்கள், பெண்களுக்கு ஒரு துயரம் வந்தால் ஆண்கள் அதை உடனே களைவார்கள்; பெண்களால் எதையும் சாதிக்கமுடியும்; அவர்கள் ஆண்களுக்கு குறைந்தவரில்லை; சமமே. இவை இராமாயணத்தில் இருந்து மேலே கண்ட மூன்று காட்சிகள் நமக்கு விளக்கும் பாடங்கள். அதை என்று உள்வாங்கிக் கொள்கிறோமோ, அன்று நிரந்தரமாக மார்ச் 8 வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். தனியாக கொண்டாடத் தேவையில்லை.

பிரபா ஸ்ரீதேவன்

error: Content is protected !!