எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது – AanthaiReporter.Com

எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது

வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்; தோல்வி ஓர் அநாதை’ என்ற பழமொழி உண்டு. பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து பாரதிய ஜனதா கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களைக் கேட்கும்போது இந்தப் பழ மொழிதான் நினைவில் வருகிறது. இந்தத் தோல்விக்கு தனிப்பட்ட யாரையும் குற்றம் கூற முடியாது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா ஆகியோரைக் காக்கவே இவ்வாறு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
edit nov 13
பா.ஜ.க. வெற்றி பெற்ற போதெல்லாம் அதற்கு மோடி- ஷா இணையே காரணம் என்று புகழ்ந்தவர் கள்தான் இவர் கள். தோல்வி ஓர் அநாதைதான். ஆனால், பா.ஜ.க. தன்னை மறுபரிசீலனை செய்து கொள்ள பிகார் தேர்தல் முடிவு கள் உதவ வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டவர் கள் விரும்புகின்றனர். அதற்கு, தோல்வி யின் பின்புலத்தை பா.ஜ.க. தீர ஆலோசிக்க வேண்டும். அதற்கு மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்களைக் காப்பதற் காக பூசி மெழுகுவது அந்தக் கட்சிக்கு கண்டிப்பாக நன்மை விளைவிக்காது.

கடந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றபோது, அதற்கு முழுமையான காரணமாக இருந்தார் மோடி. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரி யாணா மாநிலத் தேர்தல் களிலும் பா.ஜ.க.வின் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. அந்த விஜய பவனிக்கு தில்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் முற்றுப்புள்ளி வைத்தார்.அதன்பிறகு, தற்போது நடந்து முடிந்த பிகார் தேர்தல், நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க.வின் வெற்றியைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்திலும், அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் மகா கூட்டணி என்ற பெயரில் கைகோத்தன.

தவிர, பிகாரில் கடந்த பத்தாண்டுகளாக நடத்திய ஆட்சியால் நற்பெயர் பெற்றிருந்த நிதீஷ் குமாரையே முதல்வர் வேட்பாளராகவும் அந்தக் கூட்டணி அறிவித்தது. அப்போதே அந்தக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்து விட்டது.எதிரணியில் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் திரண்ட நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ, பிரதமர் மோடி என்ற தனிநபரை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. மோடி மீதான அளவுக்கு அதிகமான நம்பிக்கையே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் எனில் மிகையில்லை. இதற்கு பிற தலைவர்களை அனுசரிக்காத அமித் ஷாவின் போக்கும் முக்கியக் காரணம்.

ஏற்கெனவே, தில்லி பேரவைத் தேர்தலில் மோடியை மட்டுமே நம்பி, பிற தலைவர்களைப் புறக்கணித்ததன் பலனையே அங்கு பா.ஜ.க. அறுவடை செய்தது. தில்லியில் ஹர்ஷ வர்த்தனை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. மறுத்ததே அங்கு பா.ஜ.க.வின் படுதோல்விக்குக் காரணமானது. அதுபோலவே, பிகாரிலும் சுஷில்குமார் மோடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் பா.ஜ.க. தவறு செய்தது.

ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஒன்பது ஆண்டுகள் மாநிலத்தைச் சிறப்பாக ஆண்டதில் சுஷில்குமார் மோடிக்குப் பெரும் பங்குண்டு. அந்த மாநிலத்தில் நிதீஷ் குமாருக்கு இணையான நற்பெயர் பெற்றவர் சுஷில்குமார் மோடி. ஆனால், கட்சிக்குள் ஒத்த கருத்து உருவாகவில்லை என்று கூறி அவரைப் பின்னுக்குத் தள்ளியது பா.ஜ.க. தலைமை.

அவர் பிகார் பா.ஜ.க.வுக்கு தலைமை ஏற்றிருந்தால்கூட தோல்வியைத் தவிர்க்க முடியாது போயிருக்கலாம். ஆனால், பிரசாரத்தின் சுமையும் தோல்வியின் வலியும் பிரதமர் மோடியை இந்த அளவு பாதித்திருக்காது. காங்கிரஸ் கோலோச்சிய காலத்திலேயே பா.ஜ.க.வின் நட்சத்திரப் பிரசாரகராக விளங்கியவர் பிகார் மண்ணின் மைந்தர் நடிகர் சத்ருகன் சின்ஹா. அவரை கடந்த இரண்டாண்டுகளாகவே பா.ஜ.க. புறக்கணித்து வந்திருக்கிறது. அவரது அதிகப் பிரசங்கித்தனமான சில கருத்துகள் கட்சிக்கு சங்கடம் ஏற்படுத்தியிருக்கலாம். அவ்வாறு அவரை வெளியில் புலம்புமாறு விட்டது கட்சியின் தவறல்லவா?

இதேபோலத்தான் பிகார் மக்களுக்கு நன்கு அறிமுகமான பா.ஜ.க. தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, ராஜீவ் பிரதாப் ரூடி, ஷாநவாஸ் உசேன் ஆகியோரும் கண்டு கொள்ளப்படவில்லை. பா.ஜ.க.வின் பிரசாரம் முழுவதுமே அமித் ஷா ஏற்பாட்டில், மோடியை மையம் கொண்டதாகவே அமைந்தது. அதனால் பிரசார வியூகமே தவறாகியது.

இதன்விளைவே, எதிர்க்கட்சியினரின் சாதாரணக் குற்றச்சாட்டுகளுக்கும்கூட பிரதமரே பதில் சொல்லும் நிலையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, மூன்றாம்தர மேடைப் பேச்சாளர் போல சில சமயங்களில் பேச வழிவகுத்தது இந்த இக்கட்டான நிலைமைதான்.இப்போது தேர்தலில் பா.ஜ.க. தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு எதிர்க்கட்சியினரின் கூட்டணி வலிமையே முதன்மைக் காரணம். ஆனால், எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது என்பதும் உண்மையே.

வாஜ்பாய், அத்வானி காலத்தில் பா.ஜ.க.வில் பல இளம் தலைவர்கள் உருவாக அக்கட்சி கடைப் பிடித்த கூட்டுப்பொறுப்பு என்ற தன்மையே காரணம். அதிலிருந்துதான் நரேந்திர மோடி உருவானார் என்பதை மறந்துவிடக் கூடாது. இன்று அந்தப் பண்பிலிருந்து பா.ஜ.க. வெகுவாக விலகிச் சென்று விட்டது. தனிமனித வழிபாடும், அதிகார மயக்கமும் கட்சியின் வீழ்ச்சிக்கே வழி கோலும். பிகார் தேர்தல் தோல்விக்கு மோடியையும், ஷாவையும் குற்றம் சாட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின் கட்கரி கூறியிருப்பதைக் காணும் போது, அந்தக் கட்சி சுயபரிசோதனை செய்யத் தயாரில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. இது மோடிக்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வுக்கும் நல்லதல்ல.

வ.மு. முரளி