உண்மை செய்தி வேறு: தொலைக்காட்சி செய்தி வேறு! – மத்திய அமைச்சர் பேச்சு – AanthaiReporter.Com

உண்மை செய்தி வேறு: தொலைக்காட்சி செய்தி வேறு! – மத்திய அமைச்சர் பேச்சு

சமூக வலைதளங்கள் முறைப்படுத்தப்படாத ஊடகங்களாக உள்ளது. மிகப்பெரிய அளவில் அதில் தவறுகள் நடப்பதோடு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது.அதே சமயம் தற்போது உண்மையான செய்திக்கும், தொலைக் காட்சிகளில் வெளியாகும் செய்திகளுக்கும் இடையே மாறுபாடு உள்ளது. ஆனால் இதற்காக ஊடகங்களுக்கு முழுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது; அந்தக் காலம் மலையேறிவிட்டது’ என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
edit oct 27
டெல்லியில் அகில இந்திய வானொலி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற, படேல் நினைவு சொற்பொழிவில் உரையாற்றிய ஜெட்லி, பேசும் போது, “ நீதிமன்றங்களின் தொடர்ச்சியான தீர்ப்புகளாலும், தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும், இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை விரிவடைந்தது. மேலும், அதைத் தவறாகப் பயன்படுத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. செய்திகளை வெளிடுவதிலும், அதை ஒலிபரப்பு செய்வதிலும் அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடங்களும் சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. தொலைக் காட்சியின் கேமராக்கள் என்ன படம் பிடிக்கிறதோ அதுதான் செய்தி. கேமரா படம் பிடிக்காத விஷயங்கள் செய்தி ஆக முடியாது. ஆப்பிரிக்க உச்சி மாநாடு குறித்து சில செய்திகள் மட்டும் இருக்கிறது. ஆனால் இளம் சிறுமி பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியது மிகப்பெரிய செய்தியாக இருக்கிறது. ஏனெனில் தொலைக்காட்சிகள் இரண்டு செய்திகளுக்கும் மாறுபட்ட முக்கியத்துவம் அளிக்கிறது.

ஆனால், சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஒழுங்குமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் தற்கால நிலைமைகளை புரிந்து கொண்டு நேர்மையுடன் செயல்பட வேண்டும் சமூக வலைதளங்களைப் பொருத்தவரை, மக்களின் குரல் ஒலிப்பதற்குக் கிடைத்த ஊடகமாக உள்ளது. ஒழுங்கு படுத்தப்படாத இந்த ஊடகத்தில், அதிக அளவில் தவறான, அவதூறான, அவமதிக்கும் வகையிலான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சமூக வலைதங்களைப் பயன்படுத்துவோரின் நேர்மையை அறிந்து, அவர்கள் கூறும் தகவல்களை நம்ப வேண்டியுள்ளது.

கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இல்லை. அவற்றுக்கான எல்லையை நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நிர்ணயித்துள்ளனர். பல்வேறு மதங்களும், கலா சாரங்களும் பின்பற்றப்படும் ஒரு சமூகத்தில், சிலர் வரம்பு மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்காமல் வேறு என்ன செய்ய முடியும்? வரம்பு மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் பிரிவுகள் உள்ளன. ஆனால், மிகவும் தீவிரமான சம்பவங்களில் மட்டுமே அந்தச் சட்டப் பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன”என்றார் ஜெட்லி.