இ-சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற ஜஸ்ட் 30 ரூபாய்! – AanthaiReporter.Com

இ-சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற ஜஸ்ட் 30 ரூபாய்!

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஆதார் அடையாள அட்டை குறித்து ஏதேதோ சொல்லி வந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வட்டை அவசியமாக கருதப்படுவதால் புகைப்படம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கடந்த 2 வருடத்திற்கு மேலாக நடந்து வரும் பணி டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு, கியாஸ் இணைப்பு ஆகியவற்றை மத்திய அரசு இணைத்து மானியம் வழங்குவதால் ஆதார் அடையாள அட்டை ரேஷன் கார்டு போன்று முக்கியமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்க 640 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கடந்த ஜூலை மாதம் வரை 5 கோடியே 60 லட்சம் பேருக்கு புகைப்படம் எடுத்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும், ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Aadhar-Card.com
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் 333 இடங்களில் பொது இ-சேவை மையங்களை அமைத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் ஒன்றும், 264 தாலுகா அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு மையமும் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள், 50 கோட்ட அலுவல கங்களில் தலா ஒரு பொது இ-சேவை மையமும், மதுரை மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவல கங்களில் தலா ஒரு மையமும் என மொத்தம் 333 மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அமைத்துள்ளது.ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைத்தவர்கள் அல்லது ஸ்மார்ட் கார்டு அளவில் பெற விரும்பினால், பொது இ-சேவை மையத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.

அரசு தலைமை செயலகத்தில் செயல்படும் பொது இ-சேவை மையத்தை, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கண்விழி-கைரேகை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையத்துக்கு சென்று, ஒப்புகை சீட்டின் பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.

இதற்கு ரூ.40 கட்டணம் பெறப்படுகிறது. ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் அட்டை பெறலாம். இதற்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப் படும். தமிழகத்தில் எந்த பகுதியை சேர்ந்தவரும், ஏதாவது ஒரு பொது இ-சேவை மையத்தில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 806 பேரும், குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 753 பேரும் பிளாஸ்டிக் அட்டை பெற்றுள்ளனர். தினமும் 5 ஆயிரம் பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது” என்றார்.