‘இளையராஜா நலம் பெற்று வர வேண்டும்!’ – வைரமுத்து உருக்கமான பேச்சு – AanthaiReporter.Com

‘இளையராஜா நலம் பெற்று வர வேண்டும்!’ – வைரமுத்து உருக்கமான பேச்சு

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி–எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘கங்காரு’. இது,’உயிர்’ ‘மிருகம்’ ‘சிந்து சமவெளி’ படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்துள்ளனர்.
cine kankaroo 27
பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. ‘கங்காரு’ பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். இதையடுத்து சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில்ஆடியோ சிடியை ஊடகங்கள் முன்னிலையில் சீமான் வெளியிட கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக் கொண்டார். அந்த விழாவில் வைரமுத்து பேசும் போது… ”இந்த விழாவில் எவ்வளவு நேரம் பேசவேண்டும் என்று தீர்மானிக்கிறவன் நானல்ல. வடிவமைக்கிற விழாவில் தனக்கு முன்னால் பேசுகிற பேச்சாளர்களின் அதிர்வலைகள்தான் ஒரு பேச்சாளன் பேசப் போகிற நேரத்தைத் தீர்மானிக்கும் என்பதை நான் நம்புகிறவன். அப்படியானால் நீண்ட இந்த விழாவில் சில மணித்துளிகள் மட்டுமே பேசலாம் என்று இந்த அரங்கம் அசரீரியாக எனக்குச் சொல்கிறது.

இரண்டு பேருக்கு என் நன்றி. என்னையும் ஸ்ரீநிவாஸையும் பூமாலையால் பாராட்டிய தயாரிப்பாளர் சுரேஷுக்கு முதல் நன்றி. என்னையும் இந்த விழாக் குழுவையும் பாமாலையால் பாராட்டிய சீமானுக்கு இரண்டாவது நன்றி.

இந்த மேடையில் எல்லோரையும் வாழ்த்துவதுதான் தர்மம் என்று உணர்ந்த சீமான், தன் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசியிருக்கிறார். அவர் பேசுகிற தொனியைக் கவனித்தேன். தொனி சொல்லும் ஒருவன் தொண்டையிலிருந்து பேசுகிறானா, நாக்கிலிருந்து பேசுகிறானா, உதட்டிலிருந்து பேசுகிறானா என்று. சீமானின் தொனி சொன்னது இந்த மனிதன் இதயத்திலிருந்து பேசுகிறான் என்று. அந்த அன்பு நெகிழவைக்கிறது.

எத்தனையோ பாட்டு வெளியீட்டு விழாக்களுக்குப் போகிறோம். பாட்டு எழுதிய வைரமுத்து என்று சொல்வதோடு அவர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள் என்று நான் வருத்தப் படுவதில்லை. ஏனென்றால் அதற்கு மேல் பேச ஆரம்பித்தால் பாட்டு வரிகளைத் தப்பாகச் சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் பெயரோடு விட்டு விடுவது உத்தமம் உசிதம்.அதுவே என் தமிழுக்குச் செய்யும் தொண்டு என்று இருந்து விடுவேன். இங்கே சீமான் பேசும் போது பல்வேறு இலக்கியங்களிலிருந்து எடுத்துக் கூறியபோது நான் என் படைப்புகளை பின்னோக்கிப் பார்த்து மீள் பார்வை செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன்.

ஒருமுறை பேரறிஞர் அண்ணா மேடையிலே பேசப் போனார். பெரிய மாலையை சுமந்து கொண்டு வந்தார்கள். ராட்சச மாலை. அண்ணா பார்த்ததும் நடுங்கி வீட்டார். இரண்டடி பின்னால் போய் விட்டார். அவர் உயரம் குறைவு. நான்கு பேர் தூக்கி எடுத்துக் கொண்ட மாலையை தோளில் தொட்டு எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

அண்ணா பேசியபோது பின் இப்படிக் குறிப்பிட்டார்,” மற்ற மேடைகளில் மாலையைக் கொண்டு வருவார்கள். நான் அணிந்து கொள்வேன். இந்த மேடையில் மாலையைச் சுமந்து வந்தார்கள் நான் புகுந்து கொண்டேன்”.

அண்ணாவுக்குப் பிறகு இரண்டுபேர் சேர்ந்து தூக்கி சுமந்து வந்த மாலைக்குள் நான் புகுந்துகொண்டேன். சுரேஷிற்கு நன்றி. மொழியின் மீதும் இசையின் மீதும் நீங்கள் கொண்டிருக்கிற காதலுக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

சாமி தமிழ்த் திரைப்பட நிகழ்காலத்தின் தவிர்க்க முடியாத இயக்குநர். நன்மையோ தீமையோ பேசியாக வேண்டியது தவிர்க்க முடியாதது.
ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று கல்கி சொல்வார். ‘ஒன்று அந்தக் கதையை எல்லோரும் பாராட்ட வேண்டும். இல்லையேல் எல்லோரும் திட்டித் தீர்க்க வேண்டும். இரண்டுமற்ற எழுத்தை எவனும் எழுதாதே’என்று. ஒரு படத்தை கொண்டாட வேண்டும். இல்லையேல் இப்படி ஒரு படமா என்று திட்ட வேண்டும். சாமிக்கு ஒரு பிம்பம் இருக்கிறது அல்லவா?. அந்த பிம்பத்தை இந்தக் ‘கங்காரு’ உடைக்கும் என்று நம்புகிறேன்.

சாமியை தெரியும்.ஆனால் முன்பு சந்தித்தல்லை. என்னைத் தேடி வராதவர்களை நான் சிந்திப்பதில்லை; தேடி வந்தவர்களை நான் நிந்திப்பதில்லை. சாமி என் வீட்டுக்கு வந்தார்; சந்தித்தார். ‘என் முதல் படத்திலிருந்து நீங்கள் எழுத வேண்டும் என்று நினைத்தேன்’ என்றார். அப்படியா என்றேன். ‘உங்கள் பட்ஜெட் பெரியது அதனால் வரமுடியவில்லை’ என்றார்.

‘உங்கள் பட்ஜெட் ரொம்ப பெரிசுன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு பணம் கொடுக்க எனக்கு வலிமை இல்லை’ என்றார். அப்படி யென்றால் இந்தப் படத்தில் வலிமை வந்துவிட்டதோ? ‘இல்லை இந்தப் படத்தில் நீங்கதான் எழுதணும்’ என்றார். நான் சொன்னேன் சாமி எனக்கு தமிழ் சினிமாவின் வியாபாரம் கொஞ்சம் தெரியும். பெரியபடத்துக்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்று தெரியும். சிறிய படத்துக்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்று தெரியும். மிகச் சிறிய படத்துக்கு.எவ்வளவு வாங்க வேண்டும் என்றும் தெரியும். நான் அதிகமாக நேசிப்பது மிகச் சிறிய படத்தைத் தான்.

பெரியபடம் என்பது கதாநாயகர்களுக்கானது. சிறியபடம்என்பது தயாரிப்பாளர்களுக்கானது. மிகச் சிறியபடம் என்பதுதான் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கானது. நான் தொழில் நுட்பக் காலஞனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தின் வியாபாரம் எனக்குத் தெரியாதா? சினிமாவில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. கர்ப்பத்தைம் பட்ஜெட்டையும் மறைக்க முடியாது. எனக்கு இது போதும் என்றேன்.

ஆனால் இந்தப் படத்துக்கு எழுதும் போது ரஜினிகாந்த் அவர்களுக்கும் கமல்அவர்களுக்கும், மணிரத்னம் அவர்களுக்கும், ஷங்கர்அவர்களுக்கும் எவ்வளவு உயரத்தில் எழுது வேனோ அந்த உயரத்திற்குத்தான் எழுதியிருக்கிறேன். ஏனென்றால் படத்தில் வருவது என் பெயர். என் பெயருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும். பெயருக்குப் பின்னால் வவுச்சர் வரப்போவது இல்லை. என் பெயரின்மீது தமிழ்நாட்டு மக்கள் ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை என் இறுதி மூச்சு உள்ளவரை காப்பாற்றுவேன். அண்ணன் தங்கையை வைத்து சாமி அற்புதமாக கதை பண்ணியிருக்கிறார்.

தயாரிப்பாளர் சுரேஷிற்குச் சில தடைகள் இருக்கலாம் தடைகளைத் தாண்டியதுதான் வாழ்க்கை. இரண்டு தென்னை மரங்கள் நேராக ஒன்றும்,வளைந்து ஒன்றும் இருந்தன. எது அழகானது என்றால் நேரே இருப்பது அல்ல. நேரே இருக்கும் தென்னை மரத்தில் மனசு வழுக்கி மேலே போய் விடுகிறது வளைந்து இருக்கிற தென்னை மரத்தில்தான் ஒவ்வொரு வளைவிலும் உட்கார்ந்து உட்கார்ந்து போகிறது.

தடை இருக்கிற வாழ்க்கையில்தான் திளைத்து திளைத்து,மகிழ்ந்து மகிழ்ந்து,நெகிழ்ந்து நெகிழ்ந்து,உழைத்து உழைத்து வாழ்க்கை முன்னேறுகிறது. எனவே தடைகளே இன்னும் கொஞ்சம் வா! துயரமே இன்னும் கொஞ்சம் வா! என்று நான் இயற்கையைப் பார்த்துக் கேட்பேன். எனக்கு துயரமே இன்னும் கொடு. துன்பமேஇன்னும் கொடு துன்பங்களையும் அதை வெற்றி கொள்ளும் திறமைகளையும் கொடு என்று கேட்பேன். . துன்பமில்லையேல் வாழ்க்கை இல்லை. இந்தப் படத்துக்கும் தடைகள் இருந்தன. அந்தத் தடைகள்தான் படத்துக்கு ஊட்டம்.

ஸ்ரீநிவாஸ் அழகான பாடகர்; ரசிகர். அழகான என்பதை நீங்கள் அடிக்கோடிட்டுக்கொள்ளலாம். சீமானின் இளமைக்குக் காரணம் அவர் நல்ல ரசிகன். எல்லோரையும் வாழ்த்துகிறவன் இளமையாக இருப்பான்.

சூரியன் ரொம்பப் பழையது; சூர்யோதயம் புத்தம் புதியது. சந்திரன்ரொம்பப் பழையது;சந்திரோதயம்புத்தம் புதியது. பூங்கொடி ரொம்பப் பழையது; பூ அன்றாடம் புதியது. வாழ்க்கை அப்படித்தான்.

இந்த சபையில் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன்.

இந்த இசை வெளியீட்டு விழாக்களுக்கெல்லாம், எங்களுக்கெல்லாம் மூலமாக இருந்தவர்; தமிழ்நாட்டு பொக்கிஷமாக இன்னும் இருப்பவர் ;கிராமத்து இசையை உலகத்தின் செவிகளுக்குக் கொண்டு சேர்த்தவர்;தமிழ் நாட்டின் இசையை உலகமெல்லாம் வெள்ளை மாளிகை வரைக்கும் விநியோகித்தவர். அந்த மகாக்கலைஞன் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். அவர் முழுநலம் பெற்று மீண்டும் வந்து இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு இசையமைத்திட வேண்டும் என்று இந்த சபையில் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீநிவாஸ் என்னிடம் பாட்டு ஒன்று கேட்டு வாங்கி மெட்டமைத்தார். அதுதான் ‘தாயும் கொஞ்ச காலம்’ பாடல் இது மனிதரை மதி, வாழ்க்கையை ரசி என்று, சொல்கிறபாடல்.நிலையாமையச் சொல்கிறபாடல். ‘கட்டையில் போறவரை சுதந்திரமில்ல கருவழியில் வந்த எதுவும் நிரந்தரமில்லை. ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து இந்தப் பூமிக்கு வந்த எதுவும் நிரந்தரமில்லை. மலை இருக்கலாம்; கடல்இருக்கலாம்; ஐம்பூதங்கள் இருக்கலாம் ஆனால் கருவழியில் வந்த எதுவும் நிரந்தரமில்லை; நிலைபெறுவதில்லை. நானோ டெக்னாலஜி வந்தால் மனிதன் 300 ஆண்டு வாழலாம். ஆனால் வாழ்க்கை சலிக்கும். போதுமடா சாமி என்றாகும்.

சுடுகாடுவரை நடந்து போக சக்தி உள்ளவரை செத்துப் போ.. என்று எழுதியிருக்கிறேன்.’கட்டையில் போறவரை சுதந்திரமில்ல’ வரியை, பாடலில் பல்லவியின் கடைசி வரியாக எழுதியிருந்தேன். அதை
ஸ்ரீநிவாஸ் முதல்வரியாக எடுத்திருக்கிறார் அவரது திறமை புரிந்தது. ஒரு இசையமைப்பாளனுக்கு மொழியறிவு இருந்தால் இசைக்கும் தொண்டு செய்ய முடியும். தமிழுக்கும் தர்மம் காட்ட முடியும்.

எவன் ஒருவன் மொழி வெளியே கேட்குமாறு இசையமைக்கிறானோ அவன் தமிழ் மக்களின் இதயத்தைச் சென்று அடைவான்.ஸ்ரீநிவாஸ் யார் எழுதினாலும் மொழி கேட்கும்படி இசையமையுங்கள். இந்தப்படம் மரியாதையான வெற்றிபெறும். வாழ்த்துகள். “என்று கூறி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், இயக்குநர் சீமான், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் சாமி, கே.எஸ். அதியமான், ஆர்.சுந்தர்ராஜன், இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ், நடிகைகள் நமீதா, வர்ஷா,ப்ரித்திதாஸ், கோமல் ஷர்மா, நடிகர்கள் சிபிராஜ், ஸ்ரீகாந்த், தயாரிப்பாள நண்பர்கள் தூவார் சந்திரசேகர், முருகேசன், இளையதேவன்,தயாரிப்பாளர் ராஜா ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில்’கங்காரு’ படப்பாடல்களை பாடகர்கள் பிபின்,ஸ்வேதா மோகன், ஷரண்யா ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பாடினார்கள்.முன்னதாக தயாரிப்பாளர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார் வெற்றி நன்றியுரையாற்றினார்.

படத்தின் டிரைலர் பார்க்க:;http://www.youtube.com/watch?v=ODJMz-X6L94