இப்படித்தான் வளர்க்க வேணும் – குட்டீஸ்களை! – AanthaiReporter.Com

இப்படித்தான் வளர்க்க வேணும் – குட்டீஸ்களை!

ஹைடெக்காகி விட்ட இன்றையக் காலக்கட்டத்தில் குட்டி பாப்பாக்களை வளர்ப்பது என்பது லேசுப் பட்ட விஷயம் இல்லை. இப்போதைய குட்டீஸ் எல்லாம் எதிர்ப்பார்ப்பதற்கும் மேலான புத்திசாலியாக இருக்கிறார்கள். ரொம்பவும் ஷார்ப் & க்யூட். அதிலும் அப்பா, அம்மாவின் குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் அளவுக்கு அறிவுக் கூர்மை. தங்கள் மூளையை செல் நெட்டில் டைம் கிடைக்கும் போதெல்லாம் தீட்டித் தீட்டி ஷார்ப் செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த குழந்தைகளை வெகு ஜாக்கிரதையாக அணுக வேண்டியுள்ளது.
child feb 22
போன தலை முறை வரைக்கும் பெற்றோரின் கனவுகளை தோளில் சுமந்து வாழ்ந்தனர். அதே இன்றைய தலை முறைக் குழந்தைகள் மிகப் பெரிய விஷயங்களையும் மிகச் சாதாரணமாக செய்து முடிக்கின்றனர். அதிகபட்ச துறுதுறுப்பால், குறும்புகளால் புரட்டிப் போடும் இவர்களை சமாளித்து சமத்தாக வளர்ப்பது குறித்து குழந்தை வளர்ப்பு ஆலோசககள் ‘‘ஆண், பெண் இரண்டு குழந்தைளுக்கும் உணர்வுகள் பொதுவானது. ஆண் பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்க்கின்றனர். அழுத்தப்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழி தான் அழுகை என்பது. அப்படி அழுவது ஆண்களுக்கு அசிங்கம் என்று சொல்லி வளர்க்கப்படுவதால் ஆண்கள் அதிக ளவில் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். அழுகை பொதுவான விஷயம். எனவே உணர்வுகளை வெளிப்படுத்து வதில் குழந்தைகளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். சிறு வயதில் ஏற்படும் உணர்வு ரீதியான பாதிப்புகள் குழந்தைகளின் ஆழ்மனதில் பதிகிறது. சம்பவம் காலப்போக்கில் மறந்துவிடும். அதனால் ஏற்பட்ட பாதிப்பும் வலியும் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது.

அதிலும் பெற்றோர் குழந்தைகள் முன்பு மிகப்பெரிய பிரச்னைகளுக்காக சண்டை போடும் போது குழந்தைகள் மனதில் இனம் புரியாத பயம் பதிவாகிறது. இந்த பயம் அவர்களுக்குள் உணர்வு ரீதியான பாதிப்புகளை உருவாக் குகிறது. பெற்றோர் குழந்தைகள் முன்னிலையில் பெரிய சண்டைகள் போடக் கூடாது. வீடு என்பது பாசிட்டிவான இடமாக மாற வேண்டும். எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை திட்டவே கூடாது. பெற்றோர் குழந்தைகள் எளிதில் அணுகும் அன்புக்குரியவர்களாக இருக்க வேண்டும். எதையும் தயக்கம் இன்றி பகிர்ந்து கொள்ளும் நண்பர்களாக மாற வேண்டும்.

பெரும்பாலான விஷயங்களில் முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டும். உன்னால் முடியும் என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். ஸ்லீப்பிங் தெரபி ஒன்று உள்ளது. குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் ஆழ்மனம் விழித்திருக்கும்.அப்போது குழந்தைகளின் அருகில் அமர்ந்து அவர் களை மனம் திறந்து பாராட்டலாம். தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விஷயங்களை அவர்களுடன் பேசலாம். இப்படிப் பேசுவதன் மூலம் அவர்களிடம் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குழந்தைகளை வழியனுப்பும் போது வாழ்த்துவதும் அவர்கள் சிறந்து வளர உதவும்,’’ என்கிறார்கள்