இன்று முதல் பிரிட்டன் நேரம் ஒரு மணி ஸ்லோ! – AanthaiReporter.Com

இன்று முதல் பிரிட்டன் நேரம் ஒரு மணி ஸ்லோ!

பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதாவது வசந்த காலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். வசந்தகாலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறு நேர மாற்றம் மேற்கொள்ளப்படும். இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்படும்.

ஆனாலும் கடந்த 1916 ஆம் ஆண்டு கோடைகால சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, கடிகாரத்தில் நேரத்தை மாற்றம் செய்வதில் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து கடிகாரத்தில் எவ்வாறு நேரத்தை மாற்றுவது என்பதை தொடர்ந்து அரசு சுவரொட்டிகள் மூலம் விளக்கமளித்து வந்தது. அதன் பின்னர் கடந்த 1941ஆம் ஆண்டு பிரிட்டன் நேரத்தில் மற்றுமொரு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கிரீன்விச் இடைநிலை நேரம் (GMT) நேரத்திலிருந்து கடிகாரம் இரண்டு மணி நேரம் முன்நோக்கி மாற்றப்பட்டது. பின்னர் 1947ஆம் ஆண்டு இரண்டு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டது.

இதேபோன்றதொரு முயற்சி 1968ஆம் ஆண்டு செய்யப்பட்டு கடிகாரம் ஒரு மணி நேரம் முன்நோக்கி மாற்றப்பட்டு, 1971ஆம் ஆண்டு வரை அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நேரத்தை மாற்றும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்படி ஞாயிறான் இன்று நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.