இந்த ரெண்டு ஹீரோக்கள் படமான தோழா-வில் ஏன் நடிச்சேன் தெரியுமா? -கார்த்தி விளக்கம் – AanthaiReporter.Com

இந்த ரெண்டு ஹீரோக்கள் படமான தோழா-வில் ஏன் நடிச்சேன் தெரியுமா? -கார்த்தி விளக்கம்

பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்க, நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல் தெலுங்கு இயக்குனர் வம்சி தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படம் ‘தோழா’.இயக்குநர் வம்சி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு வம்சி இசையமைத்துள்ளார். பி.வி.பி நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, நடிகர் சூர்யா, நடிகர் சங்கம் சார்பில் பொன்வண்ணன், குட்டி பத்மினி, லலிதகுமாரி, இயக்குநர்கள் மகிழ் திருமேனி, ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா, இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர்கள் சசிகாந்த், தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்
thozha feb 28
சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்படத்தின் இசையை வெளியிட்டார். அதுவும் எப்படி தெரியுமா?குட்டி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வந்து படத்தின் பாடல்கள் அடங்கிய தகடை அளிக்க, பாடல்களை வெளியிட் டார் நடிகர் சூர்யா. மேலும் இவ்விழாவில் ‘தோழா’ படம் உருவான விதம், பாடல்களின் டீஸர், ட்ரெய்லர் ஆகியவை திரையிடப்பட்டன.

அதில் நடிகர் சிவகுமார் பேசும் போது, “1940-களில் தமிழ்நாட்டில் வெளியான ‘தேவதாஸ்’ என்ற தெலுங்கு படம் பட்டி தொட்டியெல்லாம் சக்கைப் போடு போட்டது. அதன் ஹீரோ நாகேஸ்வரராவ். அவரது தீவிர ரசிகன் நான். அந்த நாகேஸ்வரராவின் மகன்தான் இன்று நம்மிடையே இருக்கும் இந்த நாகார்ஜுனா. நாகேஸ்வரராவின் மகனோடு அவரது ரசிகனான எனது மகன் நடிப்பது எனக்கு பெருமை…” என்றார்

சூர்யா பேசும்போது, “நாங்கள் படித்த பள்ளியில் நட்பின் பெருமை சொல்லும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பற்றி அடிக்கடி கார்த்தி வியந்து சொல்வார். கதை, திரைக்கதை, பாடல்கள், படம் எடுக்கப்பட்ட விதம் அனைததையும் பற்றிப் பாராட்டிப் பேசிக் கொண்டே இருப்பார். கார்த்தி சொன்னது போல அனைத்து நடிகர்களுக்கும் நிறைய திறமைகள் இருக்கிறது. நிறைய சாதனை கள் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரை மட்டும் தான் மிகவும் கூர்ந்து கவனிப்போம். அப்படித் தான் நான் நாகார்ஜூனா சாரைப் பார்க்கிறேன். 1980களில் இங்கிருந்து ஒரு திரையுலகம் சென்றுவிட்டது. ஏன் போச்சு, அவர் களை எல்லாம் இங்கேயே வைத்திருந்திருக்கலாம். தெலுங்கு திரையுலகம் தனியாக பிரிந்து போகாமல் இருந்திருந் தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்தார்.

படத்தின் இயக்குநரான வம்சி பேசும்போது, “பொதுவாக இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் நாகார்ஜுனா சார், கார்த்தி சார் இருவரும் நட்புடன் பழகியதால் எங்களுக்கு எந்தப் பிரச்னை யும் இல்லை.ஆனால் கார்த்தியும் தமன்னா வும்தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அது நடிப்பில் சாதிப்பதற்கான சண்டை..” என்றார்.

நடிகை தமன்னா, “இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குநர், தயாரிப்பாளர் பி.வி.பி. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, நாகர்ஜுனா சாரோடும் கார்த்தியோடும் நடித்தது மகிழ்வான விஷயம். இயக்குநர் சொன்னது உண்மைதான். கார்த்தியோடு போட்டி போடுவேன். ஏன்னா அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.. யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அவர்களோடுதான் போட்டி போட வேண்டும்.. அதனால்தான் அவருடன் செல்லமாக சண்டையுடன் போட்டி போட்டேன்..” என்றார்.
thozha feb 28 a
இவ்விழாவில் கார்த்தி பேசும்போது, “பொதுவாக நான் இரட்டை நாயகர்கள் படங்களில் நடிப்பதில்லை. ஆனால், இப்படத்தின் கதை கேட்டவுடன் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு புது தோழனாக நாகார்ஜுனா கிடைத்திருக்கிறார்.நான் படித்த பள்ளியிலேயே என் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. எங்களோடு இப்படத்தில் நடித்த கல்பனா அம்மா இன்று இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

ஒருவருக்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத இரண்டு நண்பர்கள், அவர்கள் சம்மந்தப்பட்ட ஒரு பெண் ஆகிய கதாபத்திரங்களைக் கொண்டது இந்த ‘தோழா’ படம். நானும், நாகர்ஜுனா சாரும் இப்போது உண்மையிலேயே அப்படியே ஆகி விட்டோம். ஹைதராபாத்தில் அவரது ஸ்டுடியோவில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சைக்கிள் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு. அங்கேயும் ஒட்டினேன். அவரிடம் பேசும்போது, ”ஸ்டூடியோவில் ஏன் இத்தனை ஸ்பீட் பிரேக்கர்ஸ் போட்டு இருக்கீங்க..?” என்றேன். சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் சைக்கிள் எடுத்துக் கொண்டு போனால், ஒரு ஸ்பீட் பிரேக்கரையும் காணவில்லை. எனக்காக உடனே எல்லாவற்றையும் ஆள் வைத்து தூக்கிவிட்டார். அவர் என் மீது கொண்ட அன்புக்கு வேறு என்ன சொல்ல வேண்டும்..?”என்றார்.

இவ்விழாவில் நாகார்ஜூனா பேசும்போது, “நான் ஒரு சென்னை பையன், இந்த ஊர் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இங்கிருப்பவர்களின் அன்பு எப்போதுமே நெகிழும் விதமாக இருக்கும். மதுரை, கோயம்புத்தூர் என எங்குச் சென்றாலும் மீண்டும் தமிழில் எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். நல்ல கதைக்காக மட்டுமே காத்திருந் தேன். தற்போது ‘தோழா’ மூலமாக திரும்பி இருக்கிறேன். இப்படத்தின் மூலமாக கார்த்தி என்ற நண்பன் எனக்கு கிடைத்திருக்கிறார். நான் நிறைய நடிகர்களுக்கு ரசிகனாக இருப்பதில்லை. ஆனால், நான் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகன். ‘கஜினி’ படத்தில் அவருக்கு நடிப்பைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். தெலுங்கிலும் அவர் பெரிய நடிகர் தான். சூர்யா நடித்திருக்கும் ’24’ படத்தின் கதை எனக்கு தெரியும். அது ஒரு அற்புதமான படம் ” என்று தெரிவித்தார்.