இந்திய பங்குச் சந்தை ஜிவ்! -தேர்தல் முடிவுகளின் எதிரொலி! – AanthaiReporter.Com

இந்திய பங்குச் சந்தை ஜிவ்! -தேர்தல் முடிவுகளின் எதிரொலி!

தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக, நிபுணர்கள் கணித்தது போலவே இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு 61.14–ஆக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை அன்று இது 61.42–ஆக இருந்தது. ஆக, ஒரே நாளில் ரூபாய் மதிப்பு 28 காசு உயர்ந்தது. ரூபாய் மதிப்பு உயர்வதால் கச்சா எண்ணெய், பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது. ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைந்து வருகிறது.
Indian-stock-market 10
நேற்று (திங்கள்கிழமை) வர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே அதிக இடைவெளியுடன் இந்திய பங்கு சந்தைகள் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தையின் அதிகபட்ச புள்ளியான 6357 என்ற நிலையை உடைத்துக்கொண்டு 6415 என்ற புள்ளியில் தேசிய பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கியது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு 6357 என்ற புள்ளியை உடைத்த நிஃப்டி, முதல் முறையாக 6400 புள்ளிகளுக்கு மேலே சென்றது. வர்த்தகத்தின் முடிவில் 6363 புள்ளிகளில் முடிவடைந்தது.இதே போல மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையில் 21484 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தகத்தின் முடிவில் 21326 புள்ளிகளில் முடிவடைந்தது.

நான்கு மாநில தேர்தல் முடிவுகள்தான் இந்த ஏற்றத்துக்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.கடந்த நான்கு மாதங்களில் இல்லாத ரூபாய் மதிப்பு உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.