இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அன்னா ராஜம் மல்ஹோத்ரா காலமானார். – AanthaiReporter.Com

இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அன்னா ராஜம் மல்ஹோத்ரா காலமானார்.

நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு  முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா வயது மூப்பால் மும்பையில் உயிரிழந்தார்.

1927-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்து மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் தன் கல்லூரி படிப்பை முடித்தார். பிறகு 1950-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மெட்ராஸ் மாகாணத்திலேயே பொறுப்பேற்றார்.

ராஜகோபாலாச்சாரி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, அவருக்குக் கீழ் அன்னா ராஜம் பணியாற்றியுள்ளார். பிறகு, ஆர்.என் மல்கோத்ராவை திருமணம் செய்து கொண்டார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ஆர்.என். மல்கோத்ரா, கடந்த 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டுவரை பதவி வகித்தார்.

ஐ.ஏ.எஸ் தேர்வின் நேர்முகத் தேர்வின்போது, பெண்கள் பணியாற்ற ஏதுவான துறைகளைத் தேர்வு செய்யுமாறு இவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மக்களுக்காக நேரடியாகக் களமிறங்கிப் பணியாற்றவே விருப்பம் என்று கூறி இவர் அந்தத் துறைகளில் பணியாற்ற மறுத்துவிட்டார். அதேபோல், மெட்ராஸ் கேடரிலேயே தனக்குப் பதவி ஒதுக்குமாறு அவர் கேட்டு வாங்கிக்கொண்டார்.

ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராக இருந்தபோது, ஒசூர் சப்-கலெக்டராகப் பதவியேற்றார். அன்னா ராஜம், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, அவருடன் 8 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அன்னா ராஜத்துக்குக் கிடைத்தது.

அதேபோல், ராஜகோபாலாச்சாரி உள்ளிட்ட 7 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியவர் என்ற பெருமை பெற்றவர் அவர், கடந்த 1982-ல் ராஜீவ்காந்தி எம்.பியாக இருந்தபோது அவருடன் பணியாற்றிய அவர், டெல்லியில் கடந்த 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.

அன்னா ராஜமின் சேவைகளைப் பாராட்டி அவருக்குக் கடந்த 1989-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ஐ.ஏ.எஸ் பணியில் அவர் சேரும்போது, `பெண்கள் திருமணம் செய்துகொண்டால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்’ என்ற விதி அமலில் இருந்தது. பின்னர் அந்த விதி திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.