இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக உயர்வு! – AanthaiReporter.Com

இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக உயர்வு!

உலக தரமதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் & பி) நிறுவனம் இந்தியா மீதான தரமதிப்பீட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவின் தரமதிப்பீட்டை `பிபிபி -’ என்ற நிலையிலேயே ஸ்டாண்டர்டு அண்ட் பூர் நிறுவனம் வைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே தரமதிப்பீட்டையே வழங்கியது குறிப்பிடத்தக்கது. மற்றொரு தரமதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் இந்தியாவின் மீதான தரமதிப்பீட்டை சமீபத்தில் உயர்த்தியது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தரமதிப்பீட்டை பிஏஏ3 என்ற நிலையிலிருந்து பிஏஏ2 என்ற நிலைக்கு மூடி’ஸ் உயர்த்தியது. மோடியின் தொடர் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்த தரமதிப்பீடு உயர்ந்திருக்கிறது என்று கூறி வந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கிற ஸ்டாண்டர்டு அண்ட் பூர் நிறுவனம் இந்தியாவின் தரமதிப்பீட்டில் மாற்றமில்லை எனக் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

இதனிடையே உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் ரத்து, ஜிஎஸ்டி அறிமுகம் ஆகிய 2 பிரச்சினைகளினால் ஏற்பட்ட கடுமையான தேக்க நிலையை உதறி தள்ளி 2வது காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

2017 – 2018 நிதியாண்டின் முதல் காலாண்டில், அதாவது ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாக குறைந்தது. இப்பொழுது, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்திய ஆண்டின் 2வது காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது, 5.7 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டாலும், முந்திய ஆண்டோடு ஒப்பிடும்போது 1.2 சதவீதம் குறைவாக உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இந்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் மீதமுள்ள 2 காலாண்டுகளிலும் அதாவது, 2018 மார்ச் மாதம் முடிவதற்குள் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக உயர்ந்துவிடும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.2017 – 2018 நிதியாண்டின் 2வது காலாண்டில் ஜிடிபி உயர்ந்திருப்பதற்கு குறிப்பிட்ட சில துறைகளில் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பது ஒரு காரணமாகும். சுரங்கம் மற்றும் கல்குவாரி தொழிலில் உற்பத்தி மதிப்பு 12.9 சதவீதமாக உள்ளது. அதே போல, வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறையில், உற்பத்தி மதிப்பு 12.2 சவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி துறையில் மீண்டும் வளர்ச்சி தலைதூக்கியிருப்பது ஒரு முக்கிய காரணமாகும். 2வது காலாண்டில் உற்பத்தி துறையில் வளர்ச்சி 9.5 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. ஆனால், விவசாய துறையில் வளர்ச்சி 3.7 சதவீதம் மட்டுமே உள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.