அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தயாராகுங்கள்! – விஜயகாந்த் அறைகூவல்!! – AanthaiReporter.Com

அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தயாராகுங்கள்! – விஜயகாந்த் அறைகூவல்!!

தே.மு.தி.க. 9–ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த் பேசும்போது,”மக்கள் பிரச்சினைக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை செல்ல தயாராக இருக்கிறேன். வழக்குகளை கண்டு எப்போதும் பயப்பட மாட்டேன். மடியில் கனம் இல்லை என்பதால் வழியில் பயமும் இல்லை.பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று இப்போது கூற மாட்டேன். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்தில் மாநாடு நடத்தி தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவு எடுத்தது போல, இப்போதும் மாநாடு நடத்தி தொண்டர்களின் கருத்தை கேட்ட பிறகே கூட்டணி குறித்து அறிவிப்பேன்.
sep 23 - vijaykanth. MINI
தமிழகத்தில் கடல் வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. தாது மணல் கொள்ளை மூலம் தனிநபர் ஒருவர் மட்டும் சம்பாதித்து வருகிறார். அந்த பணத்தில் அரசு நினைத்தால் மக்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்ய முடியும்.ஒரு லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். ஆனால் 60 லட்சம் கோடிக்கு மேல் தாது மணல் கொள்ளை மூலம் பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் இருந்தால் மக்களுக்கு வரியில்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடியும்.கனிம மணல் கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் ஒரு அடி ஆழம் மட்டுமே தோண்டலாம் என்ற விதிமுறையை மீறி 20 அடி ஆழத்திற்கு கடற்கரைகளில் மணல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் யாழ்பாணத்தில் தமிழர் ஆட்சி அமைந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், சிறை பிடிக்கப்பட்டும் வருவதை இந்திய அரசு தட்டி கேட்க வேண்டும்.கூடங்குளம் பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து விட்டு அணுமின் நிலையத்தை செயல்படுத்த வேண்டும்.மேலும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தே.மு.தி.க. தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும்” என்றார் விஜயகாந்த்.