அம்பாசிடர் ஆயுள் முடிஞ்சி போச்! – AanthaiReporter.Com

அம்பாசிடர் ஆயுள் முடிஞ்சி போச்!

நம்மில் பலருக்கும் பிளசர் கார் என்றாலே அம்பாசிடர்தான் ஞாபகம் வரும்.அதிலும் முன்னும் பின்னும் ஒரே வடிவமைப்பில் பார்க்கவே அம்சமாய் இருப்பதுடன்.பெரும்பாலும் வெள்ளை வெளேரென்ற காரின் நிறம் தான் உடனடி ஞாபகத்திற்கு வரும். அதிலும் அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் முதல் மந்திரிகளின் செல்லப்பிள்ளையாக இருந்த அம்பாசிடர் கார் கடந்த 70 ஆண்டு கால கம்பீரமான பயணத்தை திட்டமிட்டபடி கடந்த கடந்த் சனிக்கிழமை முடித்துக் கொண்டது.
Ambassador 2
புதிது புதிதாக ஆயிரம் தான் நவீன-சொகுசு கார்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பாதுகாப்புக்கும் வசதிக்கும் அம்பாசிடர் காருக்கு இணையாக வேறு எந்த காரும் இருக்க முடியாது என சில மூத்த குடிமக்கள் பெருமையாக குறிப்பிடுவதுண்டு.மூத்தோர் வாக்கு பொய்த்ததில்லை என்ற முதுமொழி மெய்ப்பிக்கும் விதத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி.தொலைக்காட்சி நடத்திய சர்வே ஒன்றில் உலகின் தலைசிறந்த டாக்சி தொடர்பான நிகழ்ச்சியில், மற்ற தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளி ‘இந்தியாவின் பெருமிதம்’என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் முதலிடத்தை பிடித்ததும் நினைவிருக்கும்.தொழிலதிபர் சி.கே.பிர்லாவுக்கு சொந்தமான இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம்,1948-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹுப்ளி மாவட்டத்தில்தான் அம்பாசிடர் கார்களை முதன்முதலாக தயாரித்தது.பின்னர் 1980-ம் ஆண்டு மலிவு விலையில் மாருதி கார்கள் தயாரிக்கப்பட்ட பிறகு மெல்ல, மெல்ல மவுசை இழந்த அம்பாசிடர் கார்கள் இந்திய சாலைகளில் காண்பதற்கு அரிய அரும்பொருளாக மாறி விட்டது.ஆனாலும்
மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு அம்பாசிடர் கார்கள் வலம் வந்தாலும் 2012-13-ம் ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 390 அம்பாசிடர் கார்கள் மட்டுமே விற்பனையானது.

இப்படி இதன் தேவை குறைவாக உள்ளதாலும், நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதாலும், எதிர்காலம் குறித்த சந்தேகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் தனது அம்பாசிடர் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இனி கொல்கத்தாவில் உள்ள தனது உத்தர்பாரா உற்பத்தி தளத்தில் அம்பாசிடர் கார் உற்பத்தி செய்வது நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் இந்த கார் விற்பனையை மேம்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததாலும், பல்வேறு காரணங்களாலும் வேறு வழியில்லாமல் இந்த கார் ஆலையின் பணி மே.24 முதல் நிறுத்தப்படுகிறது என்று சிகே பிர்லா குரூப் கம்பெனி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.