அச்சச்சோ.. இந்த சின்னத்திரைகளின் சீரியல் தொல்லை தாங்க முடியலையே..! – AanthaiReporter.Com

அச்சச்சோ.. இந்த சின்னத்திரைகளின் சீரியல் தொல்லை தாங்க முடியலையே..!

இந்த குழந்தைக்கு அப்பா யாரு?’ – இதுதான் எல்லா சீரியல்களிலும் உள்ள பொதுப் பிரச்சனை. முக்கால்வாசி சீரியல்கள் என்னவோ சீரியஸாகதான் இருக்கின்றன. ஆனால், அதில் காட்சிக்கு காட்சி இழையோடிடும் நகைச் சுவை என்ற நோக்கில் பிரயோகிக்கப்படும் டயலாக்குகள்தான் நம் பெண்களை கட்டிப்போடுகிறது என்று நினைத்துக் கொள்வேன். சீரியல்கள் போன்று, இன்றைய தேதியில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை இந்தளவு வேறு எங்கே யாவது, யாராவது முன்னிறுத்துகிறார்களா? குறைந்தது ஆறு, ஏழு பேர் உள்ள குடும்பங்களில், முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களும் சுவாரஸ்யமான சண்டைகளும், பிரச்சனைகளுக்கும் வர வாய்ப்பு இருக்கிறது என்பதை விடவா, கூட்டுக்குடித்தனத்துக்கு தனி மோட்டிவேஷன் வேண்டும்? மேலும், இப்போது தெரு சண்டைகள் சுவாரஸ் யமற்றுப் போய்விட்டன. அடுத்த வீட்டில் கொலையே விழுந்தாலும் நாங்கள் அவர்கள் பக்கம் எட்டிப் பார்ப்பது தில்லை. ஒரு வீட்டில், யார் யார் என்னென்ன சீரியல்கள் பார்ப்பார்கள் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு இடஞ்சல் இல்லாத நேரமாக ஃபோனில் பேசும் உறவினர்கள், ‘பண்பானவர்கள்’ என்று பெயர் பெறுகிறார்கள்.
edit july 28
ஒரு காலத்தில் ஆண்களுக்கு கனவு கன்னியாக விளங்கிய சினிமா நாயகி, பின்னாளில் சீரியல் நாயகியாகி அதே ஆணின் மனைவியின் மதிய தூக்கத்தைகெடுக்கிறார். தொலைக்காட்சி தொடர் கதாநாயகி பெண்களுக்கு ஒரு ரோல் மாடல் என்றால் நம்புவீர்களா? அவர், எப்போதும் மிக அழகாகவும், சிரித்த முகத்துடனும் வேலைக்கும் போய், குடும்பத்தையும் சரியாக கவனிப்பவராக இருக்கிறார். ஆனால், அவர் மாமியார் வில்லியாக மாற வேண்டி இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்காமல் இருக்கிறது; அல்லது பிறந்த வீடு ஏழ்மையோடு இருக்கிறது. அல்லது மாமியாரின் பணக்காரக் தோழி, தன் ஒரே மகளை இரண்டாம் தாரமாகவாவது கதாநாயகியின் கணவருக்கு தான் கட்டிவைப்பேன் என்று காத்திருக்கிறார். இந்த ஆல் டைம் பிரச்சனை தவிரவும் நாத்தனார் ஏரியா ரெளடியோடு ஓடிபோனாலும், தம்பியை போலீஸ் பிடித்து போனாலும், கணவருக்கு வேறு தொடர்பு இருப்பது தெரிந்தாலும், அழகான உடை அணிந்து, மேட்சிங்-மேட்சிங் அணிகலனுடன் வந்து கவலைபடுகிறார். ஆதலினால் பெண் குலத்திற்கே, இனி காலையில் பொங்கின பாலுக்காக இரவு வரை மூஞ்சியை ‘உம்’ என்று வைத்து கொள்ளக்கூடாது என்ற தெளிவு பிறக்கிறது.

கதையில் எப்படியும் போலீஸ் வருகிறது. அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்கு வீட்டிலுள்ளவர்கள் போக வேண்டி யிருக்கிறது. இதெல்லாம் சாதாரண விஷயம். போலீஸ் என்றால் அதுவும் ஒரு அரசாங்க அலுவலகம் தானே என்றே தற்சமயம் தைரியம் பிறந்திருக்கிறது.

படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு கிழவர் மாத்திரை/மருந்து வாங்குகிறாரோ இல்லையோ,கண்டிப்பாக கதாநாயகி யிடம் யாவரையும் அனுசரித்துப் போக சத்தியம் வாங்குகிறார்! அந்த சத்தியம் செய்யாவிட்டாலும் கூட நாயகி நல்லவர்தான். வடிவேலு ஒரு நகைச்சுவை காட்சியில் சொல்வார் – ‘எத்தனை அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்ல்ல்லவன்னு சொல்லிட்டாங்க ‘. அதே தான் இங்கேயும். சீரியல் இயக்குனர், ஒரு கதா பாத்திரத்தை ‘நல்ல ‘ கேட்டகரியில் சேர்ப்பதென்று என்று முடிவெடுத்துவிட்டால், அது முட்டுச்சந்து தோறும் அடிவாங்கிக் கொண்டே இருக்கிறது. இப்படி பலரும், பலவிதத்திலும் கொடுமை செய்தாலும் அதையெல்லாம் குடும்ப வன் முறையாக பார்க்காமல் சகித்துக்கொண்டு வாழ்ந்து முடிப்பதே நல்ல பெண்ணிற்கான குணம் என்ற அரிய கருத்து சீரியல் தோறும் பெண்களுக்கு கிடைக்கிறது. இவ்வாறான குடுகுடு கிழவர்கள், கையை பிடித்துக் கொண்டு பேசுவதே சத்தியம் வாங்குவது போலிருப்பதால், இவர்களோடு ஒரு பத்தடி தள்ளி நின்று பேசவேண்டும் என்ற கருத்தும் நுட்பமாக வலியுறுத்தப்படுகிறது.

மேலும் கற்பு பற்றின கற்பிதங்களும் மாற்றம் கண்டிருக்கின்றன. தலைப்பிலேயே ஜோடி பெயரோடு வரும் ஒரு சீரியலில், நூறு எபிசோட் தாண்டியதும் கதாநாயகிக்கு, X பொருத்தம் என்று நினைத்தால் A என்று SMS அனுப்புங்கள். Y பொருத்தம் என்று நினைத்தால் B என்று அனுப்புங்கள் என்று போட்டி வைத்து,ஒரு சுபயோக சுபநாளில் ஜோடி மாறுகிறது. (அதில் சிலர் தன் பெயரை கூட sms அனுப்பி பார்த்தார்கள் என்பது கிளைக்கதை)

இங்கே மனிதர்கள், பூலியன் அல்ஜீப்ரா (0 அல்லது 1) போல மிகுந்த நல்லவர்கள் அல்லது அசுர கெட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காண்பதும் எளிதாக இருக்கிறது. அடர்த்தியாக மை வைத்து, வீட்டில் உள்ள நகைகளை அள்ளி அணிந்து, உறக்க பேசுபவர்கள் கெட்டவர்கள். எழையாக அல்லது அடிமையாக மட்டுமே இருப்பவர்கள் நல்லவர்கள். மேலும், வாழ்க்கை என்பது 24 மணி நேர தொடர் ப்ளானிங்க்கானது என்பதை, அடர்த்தி நகைப் பெண்மணி கற்றுத்தருகிறார். வெள்ளிக்கிழமை தோறும் ட்விஸ்ட் வைத்து முடிக்க வேண்டி இருப்பதால், நல்லவர்கள், கெட்டவர்களாக மாறி ப்ளான் போடுகிறார்கள்; கெட்டவர்கள் நல்லவர்களாக மாறி ஆக்ஸிடெண்ட் ஆகிறார்கள்.

சில டிப்ஸ் –

முக்கியமான விஷயம் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டு போகட்டும். சீரியல் என்றால் தினமும் தவறாமல், கண் இமைக்காமல் பார்க்க வேண்டும். நான் ஒருமுறை என் அம்மாவிடம் , ‘என்னம்மா இது? எவ்ளோ நல்ல பொண்ணா இருந்தாங்க; இப்போ புதுசா யார் கூடவோ சுத்துறாங்கன்னு கேட்கப் போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டேன். முந்தைய எபிசோடில் ‘அவருக்கு பதில் இவர்’ என்று ஒரு செகண்ட் காட்டியிருக்கிறார்கள்.

ஏதாவது முக்கியமான விஷயம் என்றால், கேட்பவருக்கு முதுகு காட்டி, கேமரா பார்த்து பேசுகிறார்கள். நானும் அப்படி ஒரு நாள் திரும்பி நின்று பேசி பார்த்ததில், கணவர் எப்பவோ ‘எஸ்கேப்’. ஆகவே அது வேண்டாம்.

ஒரு சீரியலுக்கு பின்னால் டைரக்டர், அஸிஸ்டண்ட் டைரக்டர், க்ரியேடிவ் ஹெட், வசனகர்த்தா, ம்யூசிக் போடுபவர் என குறைந்தது 10 – 15 ஆண்கள் இதையே தொழிலாக கொண்டு உழைக்கிறார்கள். இவர்கள் அரைத்த மாவையே அரைத்து, முடிந்த வரையில் கலாசார சீரழிவுகளை புகுத்தி கதை அமைத்து, நம் மூளைக்கு பிறர் வீட்டு வம்பு கேட்பது தான் பிடித்தமான பொழுதுபோக்கு என்று மாற்றிவைத்திருக்கிறார்கள். முடிவில், இந்த சமூகம் பெண்களை மட்டும் குறை காணும். ஆகவே அத்தகைய விமர்சனங்களை கண்டு அஞ்சத் தேவையில்லை.

நீங்க விரும்பி பார்க்கும் சீரியலில, குடிகார தம்பி திருந்தி IAS (அதேதாங்க!) கலெக்டர் ஆகிறாரா? கொடுமைக்கார மாமியார், ஒரு நாள், ஒரு பக்க வசனத்தில் (இதை முதல் எபிசொட்டிலேயே செய்து தொலைத்தால் தான் என்ன?) நல்லவர் ஆகிறாரா? நாத்தனாரை அவர் கணவர் வந்து கூட்டிப் போகிறாரா? இது போன்று எல்லாம் நல்லதாகவே வரிசையாக நடந்தால், உங்கள் சீரியல் டைரக்டர்க்கு சினிமா சான்ஸ் கிடைத்து விட்டதென்று அர்த்தம். சீக்கிரமே ஒரு குரூப் போட்டோ எடுத்து சீரியல முடிக்கப் போகிறார்கள்.. ஆனால், கவலை வேண்டாம், ஒரு ‘மஞ்சள் கிழங்கு ‘ முடிந்தால் மற்றொரு ‘கிழங்கு மஞ்சள் ‘ தொடங்கும். சீரியல்கள் ஓய்வதில்லை.

– விக்னேஷ்வரி சுரேஷ்